நாடாளுமன்றத்தில் இன்று பூஜ்ஜிய நேரத்தின்போது, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி சீரமைப்பினால் ஏற்படவுள்ள ஆபத்துகள் குறித்து கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்களின் உரை!*
*நாடாளுமன்றத்தில் இன்று பூஜ்ஜிய நேரத்தின்போது, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி சீரமைப்பினால் ஏற்படவுள்ள ஆபத்துகள் குறித்து கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்களின் உரை!*
மாண்புமிகு துணைத்தலைவர் அவர்களுக்கு நன்றி..
இந்திய அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி, 2026 ம் ஆண்டில் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் எனில், அதனால் ஏற்படவுள்ள ஆபத்தைப் பற்றிய உரை இதுவாகும்.
அனைத்து மாநிலங்களுடைய நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக 1952, 1962 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
சில மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாடு கொள்கைகளைத் தழுவி ஏற்றுக்கொண்டதாலும், மற்ற மாநிலங்கள் இந்த பிரச்சினையை புறக்கணித்து, மக்கள் தொகையை கட்டுப்பாடு இல்லாமல் வளர அனுமதித்ததாலும் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் தோன்றின.
எனவே இந்த சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்காக, 42 வது அரசியலமைப்பு திருத்தமானது (1976) 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் 25 ஆண்டுகளுக்கு மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை முடக்கியது. இதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாநிலங்கள் தங்களுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்காமல் பாதுகாக்கப்பட்டன.
2026 – ம் ஆண்டு வாக்கில் அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகை வளர்ச்சி நிலைப்படுத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையிலான, 2000 வது ஆண்டின் தேசிய மக்கள்தொகை கொள்கையின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, 84 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் இந்த முடக்கம் நீட்டிக்கப்பட்டது.
அரசியலமைப்பு திருத்தமானது மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் இலக்கை தீவிரமாக பின்பற்ற மாநிலங்களுக்கு உந்துதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
மக்கள் தொகை கட்டுப்பாட்டு இலக்கை அடையும் வகையில், தேசிய மக்கள் தொகைக் கொள்கையை அமல்படுத்துவதறகாக 2000 ம் ஆண்டு மே மாதம் மாண்புமிகு பிரதமர் அவர்கள் தலைமையில் தேசிய மக்கள்தொகை ஆணையம் நிறுவப்பட்டது.
இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளாக, தேசிய மக்கள்தொகை ஆணையம் செயலிழந்துவிட்டது என்பதோடு சீரான மக்கள் தொகை கட்டுப்படுத்துதலுக்கான இலக்கில் குறிப்பிடத்தக்க தோல்விக்கு வழிவகுத்தது.
மொத்த கருவுறுதல் விகிதமானது தமிழ்நாட்டில் 1.7 ஆகவும், கேரளாவில் 1.8 ஆகவும் உள்ளது என்று தரவுகள் காட்டுகிறது. இது இந்த மாநிலங்கள் தங்கள் மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளன என்பதையே குறிக்கிறது. இதற்கு நேர்மாறாக, உத்தரபிரதேசத்தில் மொத்த கருவுறுதல் விகிதம் 2.4 ஆகவும், பீகாரின் மொத்த கருவுறுதல் விகிதம் 3.0 ஆகவும் உள்ளது, அதாவது இந்த மாநிலங்கள் தொடர்ந்து அதிவேக மக்கள்தொகை வளர்ச்சியை கொண்டிருக்கின்றன. எனவே, தொகுதி சீரமைப்பிற்கான முடக்கத்தை 2026 ம் ஆண்டில் நீக்குவதற்கான உண்மையான காரணம் என்பது இனி செல்லுபடியாகாது என்பதையே இது குறிக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் தொகுதிமறுசீரமைப்பை அமல்படுத்துவது தங்கள் மக்கள் தொகையை வெற்றிகரமாக நிர்வகித்த மாநிலங்களை நியாயமற்ற முறையில் தண்டிக்கும். அதே நேரத்தில் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்பாடில் வைக்காத மாநிலங்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையிலானதாகும். மேலும், மக்கள் தொகையை திறம்பட கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும்.
2026 ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுமேயானால், ராஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் மொத்தமாக 150 க்கும் அதிகமான கூடுதல் இடங்களைப் பெறக்கூடும். மாறாக, தென் மாநிலங்களானது ( தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா ) ஒட்டுமொத்தமாக வெறும் 35 இடங்களை மட்டுமே கூடுதலாகப் பெறும்.
அல்லது,.
2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்போதைய 543 இடங்கள் தக்கவைக்கப்பட்டு மறுபங்கீடு செய்யப்பட்டால், தமிழ்நாடானது 8 இடங்களை இழக்க நேரிடும். அதேசமயம் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை கூட்டாக 21 இடங்களை கூடுதலாகப் பெறும். அந்த வகையில், இத்தகைய தொகுதிசீரமைப்பின் விளைவாக தேசிய குடும்பக் கட்டுப்பாடு கொள்கையை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள் தங்களுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தை இழப்பது மற்றும் செல்வாக்கு செலுத்தும் திறனை இழப்பது உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். மேலும் அவை தேசிய குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அவைத்தலைவர் அவர்களே, எங்களுடைய நியாயமான பிரதிநிதித்துவத்தையும், அரசியல் செல்வாக்கையும் நாங்கள் ஏன் இழக்க வேண்டும்? குடும்பக் கட்டுப்பாடு கொள்கையை புறந்தள்ளிய மாநிலங்களுக்கு ஏன் அதிக பிரதிநிதித்துவம் என்கிற வெகுமதி அளிக்கப்படுகிறது. இது நமது தேசிய இலட்சியத்தில் உறுதியாக இருக்கும் மாநிலங்களுக்கு எதிரான அரசியல் சதி என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த அநீதி குறித்து சரியான தருணத்தில் எச்சரிக்கை விடுத்து, மார்ச் 22 அன்று ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்!
2026 க்கு முன்னர் தொகுதி மறுசீரமைப்பிற்கான முடக்கத்தை நீட்டிக்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படாவிட்டால், 2026 இல் தானாகவே தொகுதி மறுசீரமைப்பானது தொடங்கிவிடும்.
நியாயமான தொகுதி மறுசீரமைப்பு செயல்முறையை உறுதி செய்யும் அதே வேளையில், தேசிய குடும்பக் கட்டுப்பாடு இலக்குகளை கடைப்பிடிக்கும் மாநிலங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த அவையில் எடுத்துரைத்து தெளிவுபடுத்துமாறு, அவைத்தலைவர் வாயிலாக, மாண்புமிகு பிரதமர் அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.