தமிழ்நாடு அமைச்சூர் கபடி சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் அறிவுப்புக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சூர் கபடி சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் அறிவுப்புக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்நகரை சேர்ந்த கபடி விளையாட்டு வீரர் எம்.திருவேல் அழகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கபடி விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அமைச்சூர் கபடி சங்கம் அமைக்கப்பட்டது. இந்த சங்கத்தின் மூலம் ஏராளமான கபடி வீரர்கள் உருவாகியுள்ளனர். இந்த கபடி வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்திற்காக விளையாடி வெற்றிகளை பெற்றுள்ளனர்.

மாநில அளவிலான இந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கான பதவி காலம் 3 ஆண்டுகள். தற்போதுள்ள தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்காலம் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்கள்

தமிழகத்தில் 38 மாவட்ட கபடி சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் தலைவர் மற்றும் செயலாளர்கள் மாநில கபடி சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும்.

மாநில அளவிலான தேர்தல் கடந்த 2011ல் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும். அதன்படி தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்களின் தலைவர் மற்றும் செயலாளர்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால், தற்போது 25 மாவட்ட சங்களுக்கான தேர்தல் மட்டுமே நடந்துள்ளது. இந்த நிலையில், மாநில அளவிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் மே 22ம் தேதி நடைபெறும் என்று மாநில சங்கம் ஏப்ரல் 29ம் தேதி அறிவித்துள்ளது. இது தேசிய விளையாட்டு மேம்பாடு விதிகளுக்கு முரணானது. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.முரளி ஆஜராகி, வாக்கு அளிக்கும் மாவட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான தேர்தலை நடத்தாமல் தன்னிச்சையாக தேர்வு செய்துள்ளனர். அனைத்து மாவட்ட சங்களின் தலைவர் மற்றும் செயலாளர் இல்லாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய விளையாட்டு ேமம்பாடு விதிகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, தேசிய விளையாட்டு மேம்பாடு விதிகளுக்கு உட்பட்டு இந்த தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தேர்தல் அறிவிப்பு பொதுதளத்தில் அதாவது பத்திரிகைகள் வாயிலாக அறிவிக்கப்படவில்லை. எனவே, கடந்த 29ம் தேதி வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Call Now ButtonCALL ME