ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய முடியுமா என்று 14 கேள்விகளுடன் உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் நாளை விளக்கம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு; உச்சநீதிமன்றத்துக்கு ஜனாதிபதி கடிதம்: அரசியல் சாசன பெஞ்ச் நாளை விளக்கம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய முடியுமா என்று 14 கேள்விகளுடன் உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் நாளை விளக்கம் அளிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கவர்னர் கிடப்பில் போட்டு வைத்தும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தும் இருந்த 10 மசோதாக்களுக்கு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி கடந்த மாதம் 8ம் தேதி ஒப்புதல் வழங்கி தீர்ப்பளித்தது. குறிப்பாக தமிழ்நாட்டை போன்றே மசோதா விவகாரத்தில் கவர்னரின் நடவடிக்கைக்கு எதிராக பஞ்சாப், கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் தொடந்துள்ள வழக்குகள் தற்போது வரையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு, 14 கேள்விகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். அதாவது ஜனாதிபதியின் அதிகாரமான 143ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் தனது விளக்கத்தை கேட்டுள்ளார். அதில், ‘கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா? குறிப்பாக தமிழ்நாடு கவர்னர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை பெற அரசியலமைப்பின் 143வது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைதான் ஜனாதிபதி தரப்பில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசியலமைப்பே காலக்கெடுவை நிர்ணயிக்காதபோது, உச்ச நீதிமன்றம் எவ்வாறு ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியும்?. இந்த விவகாரத்தில் தெளிவான விளக்கத்தை தரும் விதமாக, தலைமை நீதிபதி தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வை அமைக்க ஆலோசனை நடத்தி தெரிவிக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தரப்பில் முக்கிய கேள்வியாக, அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்க என்னென்ன.. மேலும் 142வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் எவ்வாறு அதன் சொந்த அதிகாரங்களுடன் அதனை மாற்ற முடியும். ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் முழுமையான அதிகாரத்தை மாநிலங்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனவா, ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் எவ்வாறு நிர்ணயிக்க முடியும். பிரிவு 200ன் கீழ் கவர்னரின் முடிவுகள் என்ன? மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல்சானத்தின் வழிமுறைகள் என்ன? சட்டப்பிரிவு 142ன் கீழ் உச்ச நீதிமன்றம் அசாதாரண அதிகாரங்களை எப்படி பயன்படுத்துகிறது?. அவ்வாறு செயல்பட முடியுமா? மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் கவர்னரின் அதிகாரமான அரசியலமைப்பு பிரிவு 200ஐ நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாத வகையில், அரசியலமைப்பு பிரிவு 361 பாதுகாப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் அதனை கருத்தில் கொண்டதா?குறிப்பாக அரசில்சாசன பிரிவு 200ன் கீழ் கவர்னரின் விருப்புரிமை என்பது நியாயமான ஒன்றா? அரசியல் சாசனபிரிவு 201ன் கீழ் ஜனாதிபதி விருப்புரிமையை பயன்படுத்துவது நியாயமானதா? உச்ச நீதிமன்றம் தனிப்பட்ட அதிகாரமான அரசியல்சாசன பிரிவு 142ஐ பயன்படுத்தி ஜனாதிபதி, கவர்னர்களின் உத்தரவுகளை எப்படிப்பட்ட முறையில் மாற்றம் செய்ய முடியும்? அது எவ்வாறு சாத்தியமாகும்? உச்ச நீதிமன்றம் தனிப்பட்ட அதிகாரமான அரசியலமைப்பு பிரிவு 142ஐ நடைமுறை சட்டவிதிகளுக்கு மட்டும் பயன்படுத்த முடியுமா? அல்லது நடைமுறை விதிகளுக்கு முரண்பாடான உத்தரவுகளை பிறப்பிக்கவும் அதற்கு அதிகாரம் உள்ளதா? கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை அந்த அரசுகள் நடைமுறைப்படுத்தமுடியுமா என்பது உட்பட இத்தனை கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளது.இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விரைவாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. குறிப்பாக நீதித்துறைக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான இடைவெளி சமீப காலமாக அதிகரித்து வரும் நேரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மசோதா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் விளக்கம் கேட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி கடிதத்திற்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் நாளை விளக்கம் அளிக்கிறது.

You may also like...

Call Now ButtonCALL ME