ஜனநாயகம் வலுவாக இருக்க ஊடக சுதந்திரம் அவசியம்.. மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி வலியுறுத்தல்
ஜனநாயகம் வலுவாக இருக்க ஊடக சுதந்திரம் அவசியம்.. மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி வலியுறுத்தல்
By Veerakumar
Updated: Sat, Jun 27, 2020, 13:26 [IST]
சென்னை: ஊடக சுதந்திரம் காப்பாற்றப்பட, செய்திக்கு முந்தைய தணிக்கை நடைமுறை கூடாது என்று, மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மற்றும் தமிழக முன்னாள் அட்வகேட் ஜெனரலான ஜி.மாசிலாமணி தெரிவித்தார்.
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ரவீந்தரன், ஏற்பாட்டின் பேரில், ஊடக சுதந்திரம் என்ற தலைப்பில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கருந்தரங்கு நடைபெற்றது. இதில் மூத்த வழக்கறிஞர்கள் பலரும், மூத்த பத்திரிக்கையாளர்களும் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில், மாசிலாமணி கூறியதாவது: தனிமனிதனுக்கு எவ்வாறு பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதேபோன்ற சுதந்திரங்கள் ஊடகங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஊடகத்தையும் ஒரு தனிமதனை போலத்தான் அணுக வேண்டும்.
எனவே, ஒரு கருத்தையோ அல்லது செய்தியையோ தெரிவிப்பதற்கு ஊடகங்கள் யாருடைய அனுமதியையும் பெற தேவை கிடையாது. ஒரு ஊடகம் செய்தியை வெளியிட்ட பிறகு, அந்த செய்தி பலரது விமர்சனங்களுக்கும், சட்ட வரைமுறைகளுக்கும் உட்படும். ஆனால், செய்தி வெளியிடுவதற்கு முன்பாக தணிக்கை செய்வது என்பது கூடாது. ஊடகங்களில் வெளியாகக் கூடிய செய்திகள், சட்ட வரையறைகளுக்கு மேற்பட்டவை கிடையாது. அவை தவறாக இருக்கும் பட்சத்தில் நீதி பெறுவதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு, சட்டத்தில், வாய்ப்புகள் உள்ளன.
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம். ஊடகங்கள் வலிமையாக இருந்தால்தான் ஜனநாயகம் செழித்து ஓங்கும். அதேநேரம் ஊடகங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் ஒன்றுதான், தனி நபரின் அந்தரங்க உரிமையில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பது.
ஏனெனில், தனி நபர் அந்தரங்க உரிமை என்பது, அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஊடகங்கள் மேலும் சுதந்திரமாக செயல்படுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமை சட்டம் போன்றவை கொண்டுவரப்பட்டன. இதன் மூலம் அரசு எந்த ஒரு தகவலையும் மக்கள் மன்றத்திடம் இருந்து மறைக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே கைப்பிரதிகள் மூலமாக பத்திரிகை வெளியிட்டவர். சுதந்திர போராட்ட காலத்திலும் பல்வேறு பத்திரிகைகள் சுதந்திர வேள்வித் தீ மூட்டி உள்ளன. சுதேசமித்திரன் போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா இந்த அளவுக்கு அறிவார்ந்த சமூகமாக மாறி நிற்பதற்கு, ஊடகங்கள் மிகப் பெரிய பங்காற்றியுள்ளன. இணையதளம் பரவலான பிறகு, ஊடகச் செய்திகளின் வேகம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மாறிவிட்டது. ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் செய்தியால் பயணிக்க முடியும். ஆம்.. உலகத்தின் எந்த மூலையையும் நொடிப்பொழுதில் அந்த செய்தி சென்று சேர்த்து விட முடிகிறது. எனவே இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக செய்திகளை வெளியிட வேண்டும்.
90% தவறுகள் நிகழ்வதில்லை. 10% தவறு நிகழ்ந்தால், மொத்த பாலில் ஒரு துளி நஞ்சு விழுந்தால் எந்த மாதிரி பாதிப்போ அது போன்ற பாதிப்பைத்தான் அதுவும் ஏற்படுத்துகிறது. எனவே மிகவும் கவனமாக செயல்பட்டு உண்மை செய்திகளை ஆராய்ந்து அறிந்து வெளியிட வேண்டும்.
இந்தியாவில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டபோதுதான், ஊடகங்களுக்கு சுதந்திரம் பறிக்கப்பட்டது. மற்றபடி எப்போதுமே ஊடகங்களின் சுதந்திரத்தில் அரசுகள் தலையிடுவது கிடையாது. ஊடக சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், ஊடகங்களுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றங்கள் பெரும்பாலும் கடுமை காட்டுவது கிடையாது.
இந்த சுதந்திரத்தை ஊடகத்தினர் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் மாசிலாமணி தெரிவித்தார்.