செந்தாமரைகள்
*
எல்லா கால கட்டத்திலும் மக்களுக்கு வழிகாட்டும் ஊன்றுகோலாக கூடவே வரும் பத்திரிகைகள், நாட்டையே உலுக்கிய பல
ஊழல்களையும் வெளிக் கொண்டுவந்திருக்கின்றன. அப்படி பொறுப்பாக இருந்த பத்திரிகைத்துறையில் ஊடுருவிய சில ஊடகங்கள், நடுநிலையாக இல்லாமல், ஒரு சார்பாக
செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்து, இப்போது அது பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
செய்திகளை தருவதோடு, ஒவ்வொரு நாட்டு நடப்பையும் தன்னகத்தே உள்ள குழுக்களோடு விவாதித்து, பின்விளைவுகள், நாளைய பாதிப்புகள் என்பதையெல்லாம் யூகித்து, அதன் மீது ஒரு கருத்தை எட்டுவது என்பதே, பத்திரிகைகளில் உள்ள ஏற்பாடு. அதை பாரம்பரிய பத்திரிகைகள் செய்து கொண்டிருந்தபோது, அவை மக்களின் நம்பிக்கை பெற்ற தகவல் தொடர்பு சாதனமாக இருந்தன.
எப்போது, அரசியல் ஏஜன்ட்களும், வியாபார ஏஜன்ட்களும் பத்திரிகை, மீடியா என்று கால் பதிக்க ஆரம்பித்தார்களோ, அப்போதே பத்திரிகை அறம் மிதிபட்டது. அப்படிப்பட்ட கேந்திரங்களில்தான் தேசியத்துக்கும் சமுதாயத்துக்கும் கேடான சிந்தனை கொண்டவர்களின் கூட்டம், பத்திரிகையாளர் என்ற போர்வையில் குவிந்துள்ளது.
நாட்டு மக்களிடம் எதிர்மறை எண்ணத்தையும் போராட்ட குணத்தையும் துாண்டிவிடும் வெளிநாட்டு சதிக்கு உடன்பட்டு, அவர்களின் ரொட்டித் துண்டுக்காக ஓங்கிக் குலைக்கும் ஏவலர்களாக, அந்த போலி பத்திரிகையாளர்கள் மாறிய பிறகுதான் உள்நாட்டு குழப்பம் நிறைய முளைத்தது. ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் அக்கிரம கருத்துக்களை அரங்கேற்றும் களமாகவும் மீடியா மேடைகள் பயன்பட்டன.
எதை மக்கள் பார்வைக்கு தரலாம்; எதை தவிர்க்க வேண்டும் என்ற ஊடக அறம் இல்லாமல் செயல்படும் காளாண் தொலைக்காட்சிகளால் வீடுகளில் மனஉளைச்சல் பெருகியதுதான் மிச்சம். அதனால்தான் ஒட்டுமொத்த மீடியா மீதும் மக்களுக்கு அவநம்பிக்கை. ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம், இப்படி.
தொடர்ச்சியாக கருத்துப்பிழை செய்யும் ஊடகங்கள், சத்தமில்லாமல் சமூகத் தொடர்பில் இருந்து ஒதுக்கப்படும்.
இதில், நேர்மையோடும் நல்ல நோக்கத்தோடும் கருத்துக்களை அழுத்திச் சொல்லும் பாரம்பரிய பத்திரிகைகள், கலக்கம் அடைவதே இல்லை. களங்கப்படுத்த
நடக்கும் முயற்சிகளை கண்டுகொள்வதும் இல்லை.
பாரம்பரிய பத்திரிகைகளை பொறுத்தவரை, குழு முடிவுதான் இறுதியானது. எனவே, தனிப்பட்ட அடையாளம் இருந்தாலும், முதன்மை பொறுப்பில் இருப்பவரும்கூட, சொந்தக் கருத்துக்களை திணித்துவிட
வாய்ப்பே இல்லை. இதில் தெளிவாக இருக்கும் பாரம்பரிய பத்திரிகைகளின் நேர்மையை யாரும் சந்தேகப்படுவதில்லை.
எனவே, ஊடகத்துறையில் நடந்திருக்கும் ஊடுருவல் என்று சேற்றுக்கு மத்தியில் செந்தாமரைகளாக மலர்ந்து மணம் வீச வேண்டியது,
பொறுப்பான பத்திரிகைகளின் குணமாக தொடரும்.