கல்வி கட்டண வழக்கு தீர்ப்பு

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவிகித கட்டணத்தை 6 தவணைÀகளில் வசூலிக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக வேலை இழப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 75 சதவீதம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை, முறையே 40, 35 சதவீதம் என இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணகுமார் முன் மீண்டும் நேற்று (29.07.2021) விசாரணைக்கு வந்த போது, தனியார் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் எனவும், பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கல்வி கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பள்ளிகள் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நடப்பு 2021-22ம் கல்வியாண்டிலும், 2019-20ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து, ஜூலை 5 ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது எனவும், தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணயக் குழு அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் எனவும், கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்கள் இரு மாதங்களில் நிரப்பப்படும் எனவும் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டணமே பொருந்தும் என மாணவர்கள் தரப்பு ஆஜரான வழக்குரைஞர் வாதிடப்பட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இன்று (30.07.2021) உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி டி.கிருஷ்ணகுமார், 2019 – 2020 கல்வியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தின் அடிப்படையில், 2021 – 2022 ஆம் ஆண்டாண நடப்பு கல்வியாண்டில் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். வருவாய் இழப்பு இல்லாத அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெற்றோர்களிடம் 85 சதவீத கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதே நேரத்தில், கொரோனா ஊரடங்கால் வருவாய் இழந்த பெற்றோர்களிடம் 75 சதவீத கட்டணத்தை மட்டுமே 6 தவணைகளாக வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

கட்டணம் செலுத்த இயலாத பெற்றோர்கள் கூடுதல் கட்டண சலுகை கோரி பள்ளிகளை அணுகும் பட்சத்தில் அதனை தனியார் பள்ளிகள் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

கட்டணம் செலுத்தாதை காரணம் காட்டி, பள்ளியில் இருந்து மாணவர்களை நீக்கவோ, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கவோ மாணவர்ககுக்கு தடை விதிக்ககூடாது என தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி, கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசுக்கு நீதிபதி, உத்தரவிட்டார். கட்டண சலுகையில் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் பிரச்சனை எழுந்தால் மாவட்ட கல்வி அதிகாரிக்கு மனு அளிக்கலாம் எனவும்,
அந்த மனுவை பரிசீலித்து 30 நாட்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும், தனியார் பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட பள்ளியில் படிப்பை தொடர விரும்பாவிட்டால் அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களுடைய கட்டண விவரங்களை இணையதளத்தில் நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என தெரிவித்த நீதிபதி, கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்களை எட்டு வாரங்களில் நிரப்ப வேண்டும் எனவும், 85 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதித்து திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கையை அரசு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com