Smsj தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களின் நிலை, வசதிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களின் நிலை, வசதிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் 24 ஆண் குழந்தைகளும, 25 பெண் குழந்தைகளும் அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி, காப்பகத்தை மூட அம்பத்தூர் தாசில்தார் கடந்த 2015 ஜனவரியில் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காப்பகத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் காப்பகத்தை நேரில் ஆய்வு செய்து திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, காப்பகத்தில் தற்போது எந்த குழந்தைகளும் இல்லை என்று அறிக்கை அளித்தார்.

இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

மேலும், குழந்தைகள் பாதுகாப்பு என்பது முக்கியமானது என்றும், எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களின் தற்போதைய நிலை, அடிப்படை வசதிகள் நிர்வகிக்கும் நபர்கள் குறித்து அவ்வப்போது ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வுகள் நடத்தப்பட்டு இருந்தால் இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்த நீதிபதி, குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...