Sabaresan case mhc judge velmurugan order. Pollachi defamation case

பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக்கோரி சபரீசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். ஸ்டாலினின் இந்த பேச்சு கலைஞர் தொலைக்காட்சியிலும், நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடன் இதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ந்து தன்னை தொடர்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை ஸ்டாலின் பேசிவருவதால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தன்னை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் வி.சபரீசன், கலைஞர் தொலைக்காட்சி, நக்கீரன் ஆசிரியர் கோபால், ஜூனியர் விகடன் ஆசிரியர் அறிவழகன் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, இவர்களுக்கு எதிராக கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக்கோரி சபரீசன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. சபரீசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தனியார் பத்திரிகையில் செய்தி வெளியானதற்கு சபரீசன் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பத்திரிகைக்கும் , சபரீசனுக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் சபரீசனை வழக்கில் இணைத்தது தவறு என்றும் வாதிடப்பட்டது.

சபரீசன் தரப்பு கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதி, அவதூறு வழக்கை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும், பொள்ளாச்சி ஜெயராமனின் மனு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

You may also like...