Parole case full bench full order

நேர்முகத்தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்க நீதித்துறை பணிகள் தேர்வு விதிகளில் எந்த தடையும் விதிக்காத நிலையில், மாவட்ட நீதிபதிகள் தேர்வில் நேர்முகத்தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வு, பிரதான எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த தேர்வில், நேர்முகத்தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன.

நேர்முகத்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாததால் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட லாரன்ஸ், சுந்தரி ஆகிய இருவரும், குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயித்ததை எதிர்த்தும், பிரதான எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களைச் சேர்த்து கணக்கிட்டு தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு நீதித்துறை பணிகள் தேர்வு விதிகளில் சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் தரப்பில், விதிகள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்காத போதும், விண்ணப்பங்கள் வரவேற்று வெளியிட்ட அறிவிப்பில், நேர்முகத்தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின், குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயித்ததை எதிர்த்து வழக்கு தொடர முடியாது எனவும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்க தமிழ்நாடு நீதித்துறை பணிகள் தேர்வு விதிகள் எந்த தடையும் விதிக்காத நிலையில், குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனத் தெரிவித்து, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like...