Madurai high court order nov 23

தனியார் ரிசார்டுக்களில் வணிக நோக்கில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கியது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் உத்தரவு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது. கடந்த 2019 தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அருவிகள் இயற்கையாக உருவாகின்றன. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஐந்தருவி, குற்றாலம் அருவி உள்ளிட்ட இயற்கை அருவிகள் உள்ளன.

பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஏராளமான ரிசார்டுகள் தனியார் தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணையதளங்களில் விளம்பரப்படுத்து கின்றனர்.

இதற்காக இயற்கையான அருவிகளின் நீர் வழி பாதையை மாற்றுகின்றனர். இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆகவே மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், செயற்கை நீர்வீழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், இணையதள முகவரிகள் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து நீதிபதிகள்,

* இயற்கை அருவிகளின், நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குவது முற்றிலும் சட்டவிரோதமானது.

* 2 நாட்களுக்காக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயமுத்தூர், ஊட்டி ஆகிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.

* இக்குழு ஆய்வில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும்

மேலும் இக்குழு செயற்கை நீர்வீழ்ச்சி தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

=

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 9 பேர்கள் மீது கூட்டு சதி உட்பட விடுபட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி சிபிஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து கிழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.*

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர்கள் மீதும் கூட்டு சதி (பிரிவு 120பி) மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதிக்க கோரி மனுவை கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இளமை நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து விடுபட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி சிபிஐ தரப்பில் வழக்கு…

*சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2வது அறிக்கையின்படி கிழமை நீதிமன்றமே வழக்குகளை சேர்ப்பது தொடர்பான முடிவுகளை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.*

சிபிஐ – ஏடிஎஸ்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்கு பதிந்தது.

இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் இதுவரை இரண்டு குற்ற பத்திரிக்கைகள் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு பதிவின் போது ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீதும் இபிகோ 120பி (கூட்டு சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் மறுத்தது.

இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனுவை கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த பிரிவுகளில் குற்றம் புரிந்தமைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளது. குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது இபிகோ 120 பி பிரிவிலும், மேலும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன்
முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,

* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 9 பேர்கள் மீது கூட்டு சதி உட்பட விடுபட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி சிபிஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து கிழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

* சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2வது அறிக்கையின்படி கிழமை நீதிமன்றமே வழக்குகளை சேர்ப்பது தொடர்பான முடிவுகளை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

=

குறவன், குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதைத் தடுக்க கோரிய வழக்கு…

தமிழக காவல் துறை தலைவர், பழங்குடியினர் நலத்துறை இயக்குநரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு மதுரைக்கிளை உத்தரவு.

மதுரையைச் சேர்ந்த முத்துமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “திருவிழாக்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் குறவன்-குறத்தி ஆட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் முன்பு புராணக் கதைகள், நீதிக் கதைகள், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நடத்தப்பட்டன. சமீபகாலமாக ஆபாச நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் அதிகளவு இடம் பெறுகின்றன.

இது குறவர் சமூகத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே ஆபாசமான முறையில் குறவன்-குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆபாச குறவன்-குறத்தி ஆட்டங்களை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், ” குலசை திருவிழாவில் குறவன், குறத்தி எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடப்பட்டது எனக்கூறி அதற்கான புகைப்படத்தை தாக்கல் செய்யப்பட்டது

அதையடுத்து நீதிபதிகள்,

* பல ஆடல், பாடல் குழுவினர் குறவன், குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்கக்கூடாது.

* எந்த சமூகத்தினரும், யாராலும் அவமதிக்கப் படக்கூடாது.

* குறவன், குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதைத் தடுக்கும் வகையில் தமிழக காவல் துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்ப இயலுமா?

என்பது குறித்து, தமிழக காவல் துறை தலைவர், பழங்குடியினர் நலத்துறை இயக்குநரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You may also like...