Madras high court october 24 th day news

[10/23, 10:55] Sekarreporter: மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது கணவருக்கு சொந்தமான நிலத்துக்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், அதை பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறையை பின்பற்றுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மரணம் அடைந்த பிறகும்கூட சாதி ஒரு மனிதனை விடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது எனவும், இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று வேதனை தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடலையும் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்த நீதிபதி, மயானம் என அறிவிக்கப் படாத பகுதிகளில் உடல்களை தகனம் செய்யவோ அடக்கம் செய்வோம் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
[10/23, 11:44] Sekarreporter: எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்ல கன்வேயர் அமைக்கும் பணியின் போது கொற்றலை ஆற்றில் நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் திட்டத்துக்கான பணிகள் நடைபெறுகிறது.

சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி செல்வதோடு, சுற்றுச்சூழல் அனுமதியும் மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக கூறி, காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி என்ற மீனவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கொற்றலை ஆற்றை கடந்து செல்லும் வகையில் வழித்தடம் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆற்றின் உள்ளேயே தளம் அமைத்து கன்வேயர் பெல்ட்டை கொண்டு செல்லும் வகையில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நீர்வழிப்பாதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை அகற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீர் வழிப் பாதையில் கொட்டப்பட்ட 80 சதவீத கட்டுமான இடிபாடுகள், கட்டுமான பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீர்வழிப்பாதையில் கிடக்கும் கட்டுமான இடிபாடுகள், கட்டுமான பொருட்கள் அத்தனையையும் அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவரோ அல்லது முதன்மை செயல் அதிகாரியோ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[10/23, 14:54] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள் தேர்வில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்க வில்லை எனக் கூறி, தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த கிரேஸ் பானு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2019ம் ஆண்டு இயற்றப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏதும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 30 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள நிலையில், ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனுவுக்கு அக்டோபர் 27ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
[10/23, 16:40] Sekarreporter: அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை கட்சியின் பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தன்னை பொதுச்செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் இருபத்தி ஒன்பதாம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கட்டுப்படுத்தும் என அறிவிக்கக் கோரியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களான பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் சென்னை நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணனும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் ராஜகோபாலும் வாதிட்டனர்.

அவர்கள், இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், ஏற்கனவே கட்சி உரிமை கோரிய வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என அறிவித்து தேர்தல் ஆணையமும், டில்லி உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.

அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும், கட்சியும், சின்னமும் தங்களிடம் தான் இருப்பதாகவும், தேர்தல் ஆணையமும் இதை உறுதி செய்துள்ளதாகவும் பன்னிர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.

சசிகலா தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

வழக்கில் வாதம் முடிவடையாததால் வழக்கு விசாரணை அக்டோபர் 27க்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
[10/23, 16:52] Sekarreporter: ட்விட்டரில் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துகளை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜ செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் டவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் கடந்த 16 ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கல்யாணராமனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

அவருக்கு ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், இரண்டு மாதங்களுக்கு முன் அரசியல் உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனது பதிவுகளால் பொது அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்படாத நிலையில், தன்னை அழைத்து விசாரிக்காமல் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்த போது, மத்திய குற்றப்பிரிவு தரப்பில் அஜரான அரசு வழக்கறிஞர் பதிலளிக்க கால அவகாசம் கோரியதை ஏற்று, அக்டோபர் 26ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...