Madras high court news oct 22nd

[10/22, 12:05] Sekarreporter: உயர் நீதிமன்றத்திற்கு அலுவலக உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பித்த கண்பார்வையற்றவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் கண்பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு எழுத உதவியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு, கடந்த 2013ம் ஆண்டு அறிவித்துள்ளது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் கண்பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி கண்பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக் கூடிய தேர்வுகளில், கண்பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுவதாகவும், உயர் நீதிமன்ற பணிக்கு கடந்த ஆகஸ் 28ம் தேதி நடந்த தேர்வில் உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு அடுத்த வாரம் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
[10/22, 12:27] Sekarreporter: தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அனைவருக்கும் தண்ணீர் பகிர்ந்தளிப்பதற்கான கொள்கையை வகுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு பகுதியில் பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகியவற்றில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால், அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், தமிழக அரசு 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் தண்ணீர் பகிர்ந்தளிக்க உத்தரவிட வேண்டுமெனவும் ஈரோட்டை சேர்ந்த யு.எஸ்.பழனிவேல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் சட்டவிரோதமாக நீர் எடுக்கப்படுகிறதா என்பதை திடீர் ஆய்வுகள் மூலம் கண்டறிவதாகவும், அவ்வாறு எடுக்கப்பட்டால் குழாய்கள் அகற்றப்பட்டு, மின் இணைப்பும் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

காளிங்கராயன் வாய்க்கால் நீரேற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் தரப்பில் பாசனப் பரப்பை முறையாக ஒழுங்குமுறைப்படுத்தக் கோரி பல கோரிக்கைகள் வைத்தும் நிறைவேற்றவில்லை என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஆதாரமாக உள்ள தண்ணீர் இல்லாமல், அவை வாழமுடியாது என்றும், கிடைக்கின்ற தண்ணீரை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஒரு தரப்பிற்கு மட்டும் கிடைப்பதாக அமைந்து விடடக்கூடாது என வலியுறுத்தி உள்ளார்.

அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைக்கும் வகையில், பாசனப் பரப்பை முறையாக பதிவு செய்ய வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். விவசாய நிலங்களை விரிவுபடுத்துவதன் மூலம் நாடு பலனடையும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

பதிவுசெய்யப்பட்ட பாசன பரப்பில் உள்ள நிலங்களுக்கு முதலில் தண்ணீரை பகிர்ந்தளிக்க வேண்டுமென்பது அரசின் முடிவாக இருப்பதால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். அதேசமயம், திருடுவதற்கு ஏதுவான வளமாக தண்ணீர் இருப்பதால், அதை சட்டவிரோதமாக எடுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். தண்ணீரை திருடுபவர்கள் மீது பொதுப்பணித் துறையும், நீர் வள ஆதாரத் துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் இல்லாமல், காவல்துறையும் வழக்கு பதிவு செய்தால் தான் முறையான புகார்கள் வரும் என உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளார்.

எந்த ஒரு தனி மனிதனும் பாதிக்கப்படாத வகையில், அனைவருக்கும் தண்ணீர் பகிர்ந்தளிப்பதற்கான கொள்கை நடைமுறைபடுத்த வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
[10/22, 14:21] Sekarreporter: இந்து சமய அறநிலையத் துறை நிதியின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக இந்து அறநிலைய துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் இயங்கும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு
விண்ணப்பங்களை வரவேற்று இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் அக்டோபர் 13ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. சம்மந்தப்பட்ட பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், மற்ற மதத்தினர் யாரும் கலந்து கொள்ள தகுதி இல்லை என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னையை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சுஹைல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தன் மனுவில், தாய் மொழியை தமிழாக கொண்ட தனக்கு தமிழக அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது என்றும், இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும், அதனை ரத்து செய்து விட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோரும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் ஆஜராகினர். தமிழக அரசு தரப்பில், நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படக்கூடிய நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று விதி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.
[10/22, 15:10] Sekarreporter: அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வு மாணவர்களுக்கு இரு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும், அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசாணையை அமல்படுத்தவில்லை என்றும் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இறுதி பருவத் தேர்வுகளையும், இடைப்பட்ட பருவத் தேர்வுகளையும் நடத்த வண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை வகுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும், தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[10/22, 16:04] Sekarreporter: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான விசாரணையை தாமதப்படுத்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தொடர்ந்து முயற்சி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ ஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்ததாகவும், இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும் ராஜேஷ் தாஸ் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளார்.

சாட்சிகள் பலர், புகாரளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு கீழ் பணியாற்றுபவர்கள் என்பதால், அவரை இடமாற்றம் செய்யக் கோரியும், அது ஏற்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியை பின்பற்றி முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டிஜிபி தரப்பில் விசாகா கமிட்டி விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூல அறிக்கையை தனக்கு தரப்படவில்லை என்றும், பாரபட்சமான விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி சிறப்பு டிஜிபி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டினார். கமிட்டியில் உள்ள அருண் என்ற அதிகாரி மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வேண்டுமென்றே தனக்கு எதிரான விசாரணையை தாமதப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், விசாகா கமிட்டி விசாரணையின் ஏற்கனவே உள்ள நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அனுமதித்து விசாரணை தள்ளிவைத்தார்.
[10/22, 16:17] Sekarreporter: பேரிடர்கள், இயற்கை சீற்றங்களின் போதும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான அவசர கால மாற்றுத் திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டதால், சத்துணவு மாணவர்களுக்கு சமைத்த உணவை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தற்போது 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை துவங்கப்பட்டுள்ளதால், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருவதாகவும், நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தொடங்க உள்ளதால், அதன் பின் முட்டையுடன் சத்துணவு வழங்கப்படும் என சமூக நலத் துறை இயக்குனர், தலைமை வழக்கறிஞருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதை ஒரு போதும் நிறுத்த கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படுவதற்கு முன்பே அங்கன்வாடி மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மோசமான நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கொரோனா பேரிடர் மனித குலத்துக்கு கற்றுக் கொடுத்துள்ளதால், இயற்கை சீற்றங்கள், பேரிடர்களின் போதும், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான அவசர கால மாற்றுத் திட்டங்களை வகுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.

இந்த அவசர கால செயல் திட்டம் குறித்தும், சத்துணவு மீண்டும் துவங்கியது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய, சமூக நலத் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்கள் தள்ளிவைத்தனர்.
[10/22, 16:30] Sekarreporter: நீர்நிலைகளில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்புகளும் ஏற்படாத வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமித்துள்ள 403 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 403 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த நோட்டீசை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுக்க நடவடிக்கை வேண்டும் என உத்தரவிட்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் செய்ற்கை கோள் புகைப்படங்கள், வரைபடங்களை மாவட்ட வாரியாக தொகுத்து தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படாமல் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுப்பதை முன்னோடி திட்டமாக கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
[10/22, 16:59] Sekarreporter: பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமி லோசினியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தருவதாக கூறியதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் ஆரணி பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம்
ஆரணியில் நகர பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 7 ஸ்டார் பிரியாணி கடையில், துந்தரீகம்பேட்டைச் சேர்ந்த ஆனந்த், தன் மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோசினி ஆகியோருடன் செப்டம்பர் 8ஆம் தேதி பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவற்றை சாப்பிட்டு, வீடு திரும்பிய நிலையில், அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நால்வரும் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி லோசினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி நகர காவல் நிலையத்தில் தாய் பிரியதர்ஷினி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் பிரியாணி கடை உரிமையாளர் அம்ஜத் பாஷா மற்றும் சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் செப்டம்பர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் உணவகத்தை தரமாக பராமரித்து வருவதாகவும், கவனக்குறைவு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதையும், இழப்பீடு வழங்குவதையும் கருத்தில்கொண்டு, இரண்டு வாரங்களுக்கு தினமும் காலை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் செலுத்தியதற்கான ஆவணங்களை ஆரணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளவும் உத்தரவிடுள்ளார்.

You may also like...