Madras high court news

[8/12, 15:26] Sekarreporter: மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையின் போது, மாற்றுத் திறனளிகளுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 133 கோடி ரூபாய் எப்படி செலவிடப்பட்டது என அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் குடும்பத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவியுடன், மாற்றுத் திறனாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், 2020ம் ஆண்டு வழங்கப்பட்ட நிவாரண உதவியை பற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், 2021ம் ஆண்டு எந்த உதவியும் பெறவில்லை என்றும் வாதிட்டனர்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, 25 சதவீத கூடுதல் உதவியும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  மாற்றுத் திறனாளிகளுக்கான நிவாரண உதவிகள் உரிய முறையில் சென்றடைந்ததாக தெரியவில்லை எனவும், அவர்கள் நலனில் தனி கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

சமீபத்திய அறிக்கையில் இடைக்கால நடவடிக்கைகள் பற்றி மட்டும் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ஏற்றுக்கொள்ளத்தக்க திட்டம் ஒன்றை மாநில அரசு வகுக்க வேண்டும் எனவும் அந்த திட்டம் அடுத்த விசாரணையின் போது அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்து, விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[8/12, 17:25] Sekarreporter: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், தலைமறைவான சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி போலீசார் ஜூன் 16ஆம் தேதி டெல்லியில் அவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ஏற்கனவே அவரது இரண்டு ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகார் அளித்த பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை சீலிடப்பட்ட கவரில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2015, 2018, 2020 ஆம் ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் கொடுத்த புகார்களில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் போக்சோ சட்டம், இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3 முறை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், புகார் அளித்த மாணவிகளில் ஒருவர் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து சென்ற பிறகும் 20 நடன நிகழ்ச்சிகளை தன்னுடைய பள்ளியில் நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறும் மாணவி ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாபாவை குறித்தும் அவருடைய பள்ளியை குறித்தும் புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கைதுக்கு பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியதாக அவர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல, வெறும் புகாரின் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் எனவும் அவர் வாதிட்டார்.

10 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைக்குரிய சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாலேயே வெவ்வேறு மாதங்களில் 3 முறை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
[8/12, 21:32] Sekarreporter: இறக்குமதி காருக்கான நுழைவு வரி செலுத்திவிட்டதாக இயக்குனர் ஷங்கர் தெரிவுத்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தது.

இயக்குனர் ஷங்கர், கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ மாடல் சொகுசு காரை இறக்குமதி செய்து, கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்ய சென்றபோது, வணிக வரித் துறையிடம் நுழைவு வரி செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து ஷங்கர் தொடர்ந்த வழக்கில், 15 சதவீத நுழைவு வரியை செலுத்தி விட்டு, வாகனத்தை பதிவு செய்துகொள்ள உத்தரவிடப்பட்டது.

அதன்படி குறிப்பிட்ட தொகையை செலுத்தி காரை பதிவு செய்து பயன்படுத்தி வரும் நிலையில், ஷங்கர் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஷங்கர் தரப்பில், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, நுழைவு வரி செலுத்தும்படி 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதால், பாக்கித் தொகை 37 லட்சத்து 40 ஆயிரத்து 979 ரூபாயை அதே அண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில், இறக்குமதி கார்களுக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளின் விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வணிக வரித்துறை ஆணையருக்கு நேற்று உத்தரவிட்டதன்படி, வழக்குகளின் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்களா என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி தகவல் கோரினார்.

அதற்கு விளக்கம் அளித்த அரசு வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவிற்குபின் வணிக வரித்துறை உதவி ஆணையர்களை இணைந்து வாட்ஸ் அப்பில் ஒரு குழு தொடங்கி, அதன்மூலம் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்தார். தமிழ்நாடு வணிக வரித்துறை ஆணையர் தற்போது கோவையில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் சற்று கால தாமதம் ஏற்படுவதாகவும், உதவி உதவி ஆணையர்களிடம் தகவல் பெற்றவுடன், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.
[8/13, 12:16] Sekarreporter: இரண்டாவது முயற்சியில் காட்டுக்குள் விடப்பட்ட ரிவால்டோ யானை வனப்பகுதியிலேயே இருப்பதாக தமிழக வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானையை, வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து சிகிச்சை அளித்த வனத்துறையினர், அதனை சமீபத்தில் காட்டில் விட்டனர். ஆனால் அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்து விட்டது.

அந்த யானையை மீண்டும் காட்டில் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிடக் கோரியும் இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ரிவால்டோ யானையை காட்டுக்கு அனுப்பும் முதல் முயற்சி தோல்வியடைந்த போதும், இரண்டாவது முயற்சியாக அதை காட்டுக்குள் விடப்பட்டுள்ளதாகவும், இதுவரை யானை காட்டிலேயே இருப்பதாகவும், ஆரோக்கியமாக இருப்பதாகவும், அதன் நடமாட்டத்தை 30 வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரிவால்டோ யானையால் தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடிகிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்  எனக் கூறி, வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[8/13, 12:58] Sekarreporter: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், 90 சதவீத விசாரணையை முடிந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அதுசம்பந்தமாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து கடந்த 2017ம் ஆண்டு அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு கொண்டே வருவதாகவும், இதுநாள்வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது,
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 11 வது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விசாரணை ஆணையத்தின் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், 90 சதவீத விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டதாகவும்,100 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், ஆணைய விசாரணைக்கு தடை விதித்துள்ளதால், 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட்
25 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[8/13, 13:51] Sekarreporter: சென்னை, ஆக.14-

சென்னையைச் சேர்ந்தவர் நசீர் அகமது. கட்டிட காண்டிராக்டர். இவர், கொளத்தூர் அன்னை சத்தியாநகரில் தனது உறவினர் முகமது என்பவரது வீட்டில் முதலாவது மாடி கட்டும் பணியை கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொண்டார்.

கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த போது பெருநகர சென்னை மாநகராட்சியின் 4-வது மண்டலத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்த பி.சங்கரன், கட்டுமானத்தை பார்வையிட்டு கட்டிட அனுமதிக்கான ஆவணங்களை கேட்டுள்ளார்.

ஆவணங்களை சரிபார்த்த சங்கரன், கட்டுமான பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட்டு, தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி நசீர் அகமதுவிடம் கூறி உள்ளார். அதன்படி, சங்கரனை அவரது அலுவலகத்தில் நசீர் அகமது சந்தித்து பேசிய போது ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் கட்டிடம் இடிக்கப்படும் என்று மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து நசீர் அகமது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரையின் பேரில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரத்தை நசீர் அகமது லஞ்சமாக கொடுத்துள்ளார். லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்ட சங்கரனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், உதவி என்ஜினீயர் சங்கரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
[8/13, 15:56] Sekarreporter: போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெற்றிய எதிர்த்த தேர்தல் வழக்கில், தேர்தல் ஆணையம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைபாடுகள் உள்ளதாகவும், கடன் மதிப்பை குறைத்து காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மனுவுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம், அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த எம்.எல்.ரவி, நீதிமன்ற கட்டணம் செலுத்தாததால் தனது வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரினார். இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி பாரதிதாசன், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
[8/13, 16:19] Sekarreporter: கொரோனா நிவாரண நிதியில் இருந்து 11.55 லட்சம் ரூபாய்க்கு கிருமிநாசினி, முக கவசம், கையுறைகள் வாங்கியதில் நடந்த ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஊரக வளர்ச்சி துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் சிவஞானவேல் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா முதலாவது அலை பரவிய நேரத்தில், பஞ்சாயத்து ஒன்றியம் சார்பில், கொரோனா நிவாரண நிதியில் இருந்து, பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும், பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பதற்காகவும், கிருமிநாசினி, முக கவசம் மற்றும் கையுறைகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

லிட்டருக்கு 76 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட கிருமினாசினியை, 280 ரூபாய்க்கு 5,000 லிட்டர் வாங்கியுள்ளதாகவும், 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட முககவசங்களை 220 ரூபாய்க்கும், 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட கையுறைகளை 180 ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாக மனுவில் குற்ரம்சாட்டியுள்ளார்.

மொத்தமாக, 11 லட்சத்து 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு இப்பொருட்களை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, தனது ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் மற்றும் சேலம் ஆட்சியருக்கு புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கொரோனா நிவாரண நிதியில் நடந்த இந்த ஊழல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனுதாரர் 25 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்யும்பட்சத்தில் இந்த புகார் தொடர்பாக தணிக்கை செய்ய ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டது.

முறைகேடுகள் கண்டறியப்பட்டால் டிபாசிட் தொகையை மனுதாரருக்கு திருப்பி அளிக்கலாம் எனவும், முறைகேடுகள் நடந்துள்ளதற்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அதுசம்பந்தமாக தலைமைச் செயலாளருக்கு அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
[8/13, 17:35] Sekarreporter: போலந்து நாட்டில் நடைபெற இருக்கும் செவித்திறன் குறைப்பாடு உடையோருக்கான தேசிய அளவிலான தடகள போட்டியில் சமீஹா பர்வீனை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வீன். செவித்திறன் குறைப்பாடு உடைய இவர் தடகளட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், செவித்திறன குறைப்பாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நடத்தப்படும் தடகள விளையாட்டு போட்டிக்கான தகுதிப்போட்டிகள் டெல்லியில் நடத்தப்பட்டதில், இந்திய அளவில் கலந்து கொண்ட 12 பேரில், தகுதி சுற்றில் தகுதி பெற்றும் பெண் என்பதால் தன்னை போலந்து நாட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் 11 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் போன்ற 13 பதக்கங்களை வென்றுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சமீஹா பர்வின் தரப்பில் தகுதி சுற்றில் தகுதி பெற்ற 5 வீரர்களில் தான் மட்டுமே பெண் என்பதால் போலந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடைப்பெற உள்ள செவித்திறன் குறைப்பாடுயோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தகுதி பட்டியலில் 8வது இடம் பிடித்திருந்ததால் அவரது பெயர் இடம் பெறவில்லை என விளையாட்டு மேம்பாடு ஆணையம் தரப்பில் தெரிவிக்கபட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி 8வது இடம் பிடித்திருந்தாலும் பெண்கள் வரிசையில் அவர் தான் முதலில் உள்ளதால் அவரை அனுமதிக்க வேண்டும் என்றார்.

தேசிய காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2018 ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தங்க பதக்கங்களை பெற்றுள்ள அவருக்கு ஏன் அனுமதி மறுக்கபட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதி, தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தங்கப்பதங்களை பெற்ற சமீஹா பர்வீன் போன்ற விளையாட்டு வீராங்கனைகளை புறக்கணிப்பதெல்லாம் இந்த நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என வேதனை தெரிவித்தார்.

போலந்தில் நடைபெறும் செவித்திறன் குறைப்பாடு உடையோருக்கான சர்வதேச போட்டியில் சமீஹாவை பங்கேற்க வைத்தால் கண்டிப்பாக தங்கப் பதக்கம் பெற்று நாடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறபித்த நீதிபதி, போலந்து நாட்டில் நடைபெற இருக்கும் செவித்திறன் குறைப்பாடு உடையோருக்கான சர்வதேச அளவிலான தடகள போட்டியில் குமரி மாவட்ட வீராங்கனை சமீஹா பர்வீன் பங்கேற்க அழைத்து செல்ல உத்தரவிட்டு, நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு தொடர்பான நகலை சமீஹா பர்வீன் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் அளிக்க உத்தரவிட்டார்

மேலும், இது தொடர்பாக இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
[8/13, 17:35] Sekarreporter: இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்றாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப்படிப்பை வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி மூலம், மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளை நடத்த தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, இந்திய பார் கவுன்சில் அங்கிகாரம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தொலைதூர கல்வியில் சட்டப்படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என இந்திய பார் கவுன்சில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்றாமல், அண்ணாமலை பல்கலைக்கழகம், சட்டப்படிப்புகளை வழங்க முடியாது எனவும், இந்த படிப்புகளுக்கு புதிதாக மாணவர்களை சேர்க்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களை அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், சட்ட படிப்புகளை வழங்கும் போது, அனைத்து பல்கலைக்கழகங்களும் இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[8/13, 18:27] Sekarreporter: ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு நான்கு வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுனருக்கு அனுப்பி வைத்தது.

அந்த தீர்மானத்தின் மீது ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 2000ம் ஆண்டு தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின், 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த 3,800 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டிய ஆளுனர், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.
[8/14, 08:37] Sekarreporter: சிவசங்கர்பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

*மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீதான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
[8/14, 12:16] Sekarreporter: வங்கதேசத்திலிருந்து வந்து இந்திய குடியுரிமை பெற்றவரை அயல்நாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைத்த தமிழ்நாடு அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்த சுஷீல் சர்கார் என்பவர், அந்நாட்டின் சிறுபான்மை இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால், மத ரீதியான துன்புறுத்தல் இருக்கும் என்ற அச்சத்தில் 1996ம் ஆண்டில் 13 வயது சிறுவனாக குடும்பத்துடன் இந்தியா வந்து கொல்கத்தாவில் குடியேறி, 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இந்திய குடிமகனாக பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டுகளை பெற்ற அவர், வேலை வாய்ப்புக்காக சிங்கப்பூர் சென்றார்.

சிங்கப்பூரில் இருந்து கடந்த மார்ச் மாதம் இந்தியா திரும்பிய அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த, சென்னை விமான நிலைய குடியேற்ற துறை அதிகாரிகள், அதில் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிடாமல் போலி முகவரி மூலம் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக கூறி, கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் வந்த அவரது நடமாடுவதை தடுக்கும் வகையில், திருச்சியில் உள்ள அயல்நாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தனது கணவரை விடுவிக்க கோரி ரூமா சர்கார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆகியோர் ஆஜரானார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன், இந்து மதம் சிறுபான்மையாக உள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வந்தவர்களை குடியுரிமை சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவை அனுமதிப்பதாகவும், அதன்படி சுஷீல் சர்க்கார் முறையாக பாஸ்போர்ட் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய குடியுரிமை பெற்ற சுஷீல் சர்காரை, அயல்நாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைத்தது தவறு என கூறி, தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்ததுடன், சுஷீல் சர்காரை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
[8/14, 12:37] Sekarreporter: அதிமுக வில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரியும், அந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

இதுசம்பந்தமான அறிக்கை,
இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 24ம் தேதி நேரில் ஆஜராக ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஏராளமான புகார்களின் அடிப்படையிலும்,
புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்கு கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது எனவும், இதை கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தங்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுக்கள், விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[8/14, 15:34] Sekarreporter: அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதில் அளிக்க அதிமுகவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்த முனுசாமி என்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2008 முதல் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியில் இருப்பதாகவும் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த சங்கத்தில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் உறுப்பினராக தமிழகம் முழுவதும் இருப்பதாகவும், தொழிற்சங்க பேரவைகளுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும் என கடந்த 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த தேர்தல் மாநிலம் முழுவதும் 14 ஆகஸ்ட் முதல் 17ம் தேதி செப்டம்பர் வரை 5 கட்டங்களில் நடத்தபடவுள்ளது. நிர்வாகிகள் தேர்தலுக்காக நாளிதழில் கடந்த 6 ஆகஸ்ட் தேதி அறிவிப்போடு வெளியிடப்பட்டதாகும், தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அதே போன்று தேர்தல் காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 2 மணி வரை 5 மணி நேரம் மட்டுமே தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

சென்னையில் வேளச்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கபட்டுள்ளது. சென்னையில் உள்ள சங்க உறுப்பினர்கள் சுமார் எட்டாயிரம் பேர் வரையிலான ஒரே இடத்தில் வாக்களிப்பதற்கு உள்ளதாகவும் 5 மணி நேரத்தில் இவ்வளவு உறுப்பினர்கள் ஓரே இடத்தில் வாக்களிப்பது என்பது இயலாத ஒன்று என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய கொரானா பரவல் தடுப்பதற்காக மாநில அரசு பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதித்து உத்தரவிடுள்ளது.

இந்தநிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் தேவையற்ற கொரானா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது பொதுமக்களுக்கு பாதிப்பு எற்படும் தேர்தல் விதிகளுக்கு புறம்பாகவும் கொரோன பரவல் நேரத்தில் நடைபெறவுள்ள தேர்தலை ரத்து செய்ய வேண்டும் தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன்
மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணா பேரவை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.
[8/14, 16:03] Sekarreporter: அரசு நிலங்களில் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளையும், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளையும் தடுக்க அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ளும்படி, மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில் உள்ள அப்பியம்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பதை தடுத்து, அவற்றை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சரவணன், ஜெய்சங்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கிராமத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மனுதாரர்களே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு நிலங்களில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்க, தர்மபுரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள மனுதாரர்களுக்கு எதிராகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

மேலும், அரசு நிலங்களில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளையும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பையும் தடுக்க அடிக்கடி ஆய்வுகள் நடத்த மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
[8/14, 18:06] Sekarreporter: பெண்களுக்கு எப்பொழுது சொத்தில் உரிமை உள்ளது என்று முக்கிய அப்பீல் வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் டி.ராஜா, சந்திரசேகர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் வக்கீல் சீனிவாசன் ஆஜராகி, கடந்த 2004ம் ஆண்டுக்கு முன் பாகபிரிவினை செய்த சொத்தில் பெண்களுக்கு உரிமை உள்ளது. தமிழக அரசு கடந்த 1989ம் ஆண்டு பெண்களுக்கு சொத்தில் உரிமை உள்ளது என்று ஒரு சட்டம் இயற்றியது. இது சரியானதா அல்லது மக்களவையில் கடந்த 2005ம் ஆண்டு பெண்களுக்கு சொத்தில் உரிமை உள்ளது என்று மத்திய அரசு இயற்றிய சட்டம் இயற்றியது சரியா என்று தெளிவு படுத்த வேண்டும் என்று வாதாடினார்.

இதை கேட்ட நீதிபதிகள் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு கூறினர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது—

தமிழக அரசு 1989ம் ஆண்டு பெண்களுக்கு சொத்தில் உரிமை உள்ளது என்ற சட்டம் செல்லாது. கடந்த 2005ம் ஆண்டு மக்களவையில் பெண்களுக்கு சொத்தில் உரிமை உள்ளது என்று சட்டம் தான் பொருந்தும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் படி கடந்த 2004ம் ஆண்டு முன் பாகபரிவினை செய்த சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லை. கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு சொத்தில் பெண்களுக்கு உரிமை உள்ளது.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளனர்.
[8/15, 12:18] Sekarreporter: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தேசிய கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொடியேற்றி வைத்த பின், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமை செயலாளர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, மத்திய மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள், வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீதிபதி என்.கிருபகரனை தலைமை நீதிபதி ஆரத்தழுவி வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்

கொரோனா கட்டுப்பாட்டுகள் காரணமாக இந்த நிகழ்வுகள் அனைத்தும் உயர் நீதிமன்ற யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

You may also like...