Madras high court news

[10/29, 11:37] Sekarreporter: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள அண்ணாத்த படத்தை  சட்டவிரோதமாக இணையதளங்கள் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம்   உத்தரவிட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது.இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப்படத்தில்,
நயன்தாரா , கீர்த்தி சுரேஷ் , குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இணையத்தள    சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்புள்ளதாகவும், இந்த படத்தை இதுபோன்ற வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால்,  சட்ட விரோதமாக இணையதளங்களில் படத்தை  வெளியிட தடை விதிக்க கோரி சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த து. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் சினேகா ஆஜராகி சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் படத்தை வெளியிட   தடை விதித்து உத்தரவிட்டார்.
[10/29, 11:49] Sekarreporter: நடிகர் தனுசின் வேலையில்லா பட்டதாரி படத்தில் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை சட்ட விதிகளை மீறல் தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், பட தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் உத்தரவிடக்கோரி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்த பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், ஆட்சேபத்துக்குரிய பேனர்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட போஸ்டர்கள் சினிமோட்டோகிராப் சட்டத்தின் கீழ் வராது என்பதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், சிகரெட் மற்றும் புகையிலை விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்டப்படி அமைக்கப்பட்ட குழு மூலம் படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ், இயக்குனர் வேல்ராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் நடவடிக்கையை தொடரவில்லை என மத்திய – மாநில அரசுகள் தரப்பிலும், சென்சார் போர்டு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியும், மேற்கொண்டு எந்த தவறும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் வொண்டர்பார் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அரசு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புகையிலை மிக மோசமான சுகாதார பாதிப்பு தரும் பொருள் என கருதப்படுவதாகவும், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் பாதிப்பு இந்தியாவுக்கு ஆண்டுக்கு 13,500 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடராக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க பொது சுகாதார துறை இயக்குனருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

புகையிலை சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள குழுவில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்பி, புகார்கள் மீது எந்த தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[10/29, 12:35] Sekarreporter: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை, முடிவுகள் வெளியிடப்பட்ட 60 நாட்கள் வரை பாதுகாக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நசீம்பி என்பவர் தாக்கல் செய்த மனுவில், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பெட்டிகளின் மீது வைக்கப்படும் முத்திரைகள், வேட்பாளர்களின் முன் அகற்றப்பட வேண்டும் என்பதை மீறி, சில வார்டுகளின் வாக்குப்பெட்டிகளின் முத்திரைகள் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுசம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நசீம்காத்து என்பவரின் வெற்றியை எதிர்த்து விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளதால், வாக்கு எண்ணிக்கையின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகளையும், கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்த போது, வீடியோ பதிவுகள், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து 45 நாட்கள் பாதுகாக்கப்படும் எனவும், வீடியோ பதிவுகளை பாதுகாக்கும்படி, தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பிலும், மாநில தேர்தல் ஆணையம் தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, வீடியோ பதிவுகளை 60 நாட்கள் வரை பாதுகாக்கும்படி அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார்கள் வந்தால் வீடியோ பதிவுகளைப் பெற்று பாதுகாக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[10/29, 13:11] Sekarreporter: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பி.வில்லியம், பி.எம்.பாசில் உள்ளிட்ட மூவரின் வழக்கறிஞர் பதிவை சஸ்பென்ட் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தொடர்பாக நரம்பியல் துறை பிரபல மருத்துவர் சுப்பையாவுக்கும், பொன்னுச்சாமி என்பவருக்கும் இடையேயான பிரச்சினையில், கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பட்டப்பகலில் மறுத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் தாக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அதுதொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்ட 9 பேரில் வில்லியம், பாசில் ஆகியோர் வழக்கறிஞராக தொழில்புரிபவகள்.

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார் வெளியிட்டு அறிவிப்பில், குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட வில்லியம் மற்றும் பாசில் ஆகியோரின் வழக்கறிஞர் பதிவை இடைநீக்கம் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் ஆர்.நடேஷ்குமார் தொழில்புரிய தடைவிதித்தும் பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
[10/29, 14:39] Sekarreporter: எதிர்காலத்தில் உயர் நீதிமன்ற பணியிடங்களில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கக்கூடிய இடங்களை தலைமை பதிவாளரும், மனுதாரர் தரப்பும் இணைந்து கண்டறியும்படி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் கண்பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு எழுத உதவியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு, கடந்த 2013ம் ஆண்டு அறிவித்துள்ளது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் கண்பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி கண்பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தரப்பில், உதவியாளர்கள் இல்லாமல் தேர்வு எழுதக்கூடியவர் மட்டுமே தேர்வுற்கு விண்ணப்பிலாம் என் அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருந்ததாகவும், அதனடிப்படையில் 40 சதவீதம் வரை குறையாடு உள்ளவர்கள் விண்ணப்பித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் தேர்வு நடைமுறைகள் கடைசிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், உதவியாளர்கள் இல்லாமல் தேர்வெழுதக்கூடியவர்கள் பங்கேற்கலாம் என்ற அறிவிக்கப்பட்டபோது வழக்கு தொடராத நிலையில், இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த நிவாரணமும் வழங்க முடியாது என மனுதாரருக்கு தெளிவுபடுத்தினர்.

நீதி பரிபாலனத்தில் ஈடுபட்டுள்ள உயர் நீதிமன்றம், விளிம்பு நிலை மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டுமெனவும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், எதிர்காலத்தில் எந்தெந்த பணியிடங்களில் மாற்று திறனாளிகளையும், பார்வை மாற்று திறனாளிகளையும் நியமிக்கலாம் என்பது குறித்து, மனுதாரர் மற்றும் தலைமை பதிவாளர் ஆகிய இரு தரப்பு வழக்கறிஞர்களும் கலந்து பேசி விரிவான அறிக்கையை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
[10/29, 17:35] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜெ .சத்ய நாராயண பிரசாத் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வரவேற்று பேசிய பிறகு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்கங்களின் தரப்பில் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

பின்னர் ஏற்புரையாற்றிய நீதிபதி சத்ய நாராயண பிரசாத், 11 வயதில் தந்தையை இழந்த தான், இந்த நிலைக்கு உயர்வதற்கு தனது தாயே முழுமையான காரணம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மாவட்ட நீதிபதியாக இருந்த தனது தந்தை 45 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த வாய்ப்பு தற்போது தனக்கு கிடைத்துள்ளதாகவும், வழக்கறிஞராக பதிவு செய்த 2 மாதங்களிலேயே நீதிமன்றத்தில் வாதிடுவதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் பெருமைபட தெரிவித்தார். உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் தனது பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்து, காலியிடங்கள் 15 ஆக உள்ளது.

நீதிபதி ஜெ. சத்ய நாராயண பிரசாத் சுயவிவரக் குறிப்பு :

1969ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி தஞ்சாவூரை சேர்ந்த ஜெய்பிரசாத் – லட்சுமி தம்பதியருக்கு பிறந்தவர்.

சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை வரலாறு முடித்து, டெல்லியில் முதுகலை வரலாறு படிப்பை முடித்துள்ளார். பின்னர் டெல்லி பல்கலைகழகத்தில் சட்டப்படிப்பை முடித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 1997 ஜனவரி 29ல் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

பி.எஸ்.என்.எல்., இந்தியன் ஆயில் நிறுவனம், துறைமுக பொறுப்புக் கழகம் ஆகியவற்றிற்கு வழக்கறிஞராக ஆஜராகியுள்ளார்.

24 ஆண்டுகள் வழக்கறிஞர் தொழிலில் அனுபவம் உடையவர்
[10/30, 07:03] Sekarreporter: சென்னை, அக்.29:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தனது சக ஊழியர்கள் மூவரை சுட்டுக் கொன்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை(சிஐஎஸ்எஃப்) தலைமைக் காவலருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆயுள் தண்டனைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை(சிஐஎஸ்எஃப்) தலைமைக் காவலர் விஜய் பிரதாப் சிங், திடீரென சக ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமைக் காவலர்கள் மோகன் சிங், சுப்புராஜ், உதவி சப் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடையத் தலைமைக் காவலர் விஜய் பிரதாப் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், தலைமைக் காவலர் விஜய் பிரதாப் சிங்கிற்கு மூன்று ஆயுள் தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து விஜய் பிரதாப் சிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆ.என்.மஞ்சுளா,
மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் விஜய் பிரதாப் சிங், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நாள்பட்ட மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும் இந்த உண்மை தெரியாமல், துப்பாக்கியை கையாளுவதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அனுமதியளித்துள்ளது.

ஒருவித மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான மருத்துவச் சான்றுகள் உள்ளன.
இந்த மனநோய் குறித்த உண்மைகளை மதிப்பிடத் தவறிய செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதியும், இவ்வழக்கில் தலைமைக் காவலருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் கூட, மனநலம் குன்றிய குற்றவாளிக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே மனநலம் இல்லாதவர்கள் செய்யும் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் விலக்கு அளித்து, மனுதாரரின் மூன்று ஆயுள் தண்டனைகளும் ரத்து செய்யப்படுகிறது.

இருப்பினும், இது முடிவு அல்ல. இந்திய தண்டனை சட்ட பிரிவு 84 கீழ் விதிவிலக்கைப் பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனை பெறாமல் சமூகத்தில் சுதந்திரமாகச் செல்வதை அனுமதிக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை குற்றவியல் நடைமுறை சட்டத்தின்(சிஆர்பிசி) கீழ் பாதுகாப்பாகக் காவலில் வைப்பதற்கான தொடர் உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டினர்.
எனவே இவ்வழக்கில் தொடர்புடைய விஜய் பிரதாப் சிங்கை சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள அரசு மனநல மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய ரூ.10 லட்சத்துடன், தமிழக அரசு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

You may also like...