Madras high court news

[9/22, 11:00] Sekarreporter: தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நில நிர்வாக துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஜமீன் பல்லாவரத்தில் குரோம் லெதர் கம்பெனிக்கு சொந்தமான 1.79 ஏக்கர் நிலம் குவெண்டி தாசன் என்ற பெயருக்கு பட்டா மாற்றம் செய்து 2019ல் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக இருந்த ராஜகுமார் என்பவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து குரோம் லெதர் கம்பெனி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் முன்னாள், இந்நாள் வருவாய் கோட்டாட்சியர்களை ஆஜராக உத்தரவிட்டது.

அதன்படி ஆஜரான இந்நாள் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், உண்மை ஆவணங்களை தேடியும் அவை கிடைக்க வில்லை எனவும், தான் பட்டா மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்த போது ஆவணங்கள் இருந்ததாக தற்போது தர்மபுரியில் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரியாக உள்ள முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுமாரும் குறிப்பிட்டனர்.

இதையடுத்து ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரணை நடத்தி நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், பட்டா மாற்றம் செய்ய தாசில்தாருக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில், மேல் முறையீட்டு அதிகாரியான வருவாய் கோட்டாட்சியர் எப்படி பட்டா மாற்ற உத்தரவை பிறப்பித்தார் என்பது குறித்தும், தவறிழைத்த அதிகாரிகள் மீது எடுக்க உள்ள நடவடிக்கை குறித்தும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[9/22, 12:18] Sekarreporter: ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கை நீட் தேர்வு எதிர்ப்புக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி,கடந்த 2016ம் ஆண்டு மக்கள் நல கூட்டணி சார்பில் எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வீரபாண்டியன் உள்ளிட்ட 6 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றச்சாட்டு பதிவும் வைகோ திருமாவளவன் உள்ளிட்டோரிடம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், குற்றச்சாட்டில் திருத்தம் மேற்கொள்வதற்காக வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோரை நேரில் ஆஜராக இன்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்திய கம்யூ கட்சியை சேர்ந்த வீரபாண்டியன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை நீதிபதி முன்பு மறுத்தனர்.அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு தரப்பின் சாட்சி விசாரணைக்காக வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு விரிவான அறிக்கையை வழங்கியிருப்பதாகவும் அதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக சட்டம் இயற்றப்பட்டதாகவும் கூறினார். அவரின் அறிக்கையை படிக்கும் போது ஆதாரமாகவும், அறிவுப்பூர்வமாகவும் நீட் தேர்வு பாதிப்பு குறித்து தெரிந்து கொள்ள முடிவதாகவும் கூறினார். மேலும் ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கை நீட் தேர்வு விலக்கிற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், நிச்சயம் இந்த சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தொல்.திருமாவளவன் பேசினார்.

பேட்டி,திருமாவளவன், விசிக தலைவர்.
[9/22, 12:44] Sekarreporter: கடலூர் முந்திரி ஏற்றுமதி நிறுவன தொழிலாளி கோவிந்தராசுவின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மரண வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு மர்மமான முறையில் மரணமடைந்தார்.

செப்டம்பர் 19ஆம் தேதி வேலைக்கு சென்று வீடுதிரும்பாத தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் தான் மரணத்திற்கு காரணம் எனது தந்தையின் உடலில் பல ரத்த காயங்கள் மற்றும் அடித்து துன்புறுத்தி அடையாளங்கள் இருந்ததாகவும். தனது தந்தை கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ்
தான் காரணம் எனவும், மேலும் எனது தந்தையின் மரணத்தை உரிய முறையில் காவல்துறை விசாரிக்கவில்லை
எனக் கூறி, தந்தையின் மரணம் தொடர்பான காடாம்புலியூர் காவல் நிலைய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் வழக்கு தொடர்ந்தார்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதால் தந்தையின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் உடலை அங்குள்ள மூன்று மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி மனுதரார் விரும்பினால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவரை அனுமதிப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் மனுதாரர் தரப்பில்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அதன் மருத்துவர்களை கொண்டுதான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி நிர்மல்குமார், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கோவிந்தராசுவின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு நாளை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

கோவிந்தராசுவின் மரணம் தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தினர் ஆரம்பகட்ட விசாரணை நடத்திவரும் நிலையில், அதை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆய்வாளரின் விசாரணையை பண்ருட்டி டி.எஸ்.பி. கண்காணிக்கவும், அதை கடலூர் எஸ்.பி. மேற்பார்வையிட வேண்டுமெனவும் உத்தரவிடுள்ளார்.

காவல்துறையினரின் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[9/22, 13:31] Sekarreporter: தேர்வெழுதும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், 2019ஆம் ஆண்டு ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள கண்பார்வையற்றவர்களுக்கு, தேர்வு எழுத உதவியாளர்களை நியமிக்க கோரியும், தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்க கோரியும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் 2019ல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கண்பார்வையற்றவர்கள் தேர்வெழுத உதவியாளர்களை நியமிக்கவும், கூடுதல் நேரம் ஒதுக்கவும், அதுசம்பந்தமாக வழிகாட்டு விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வை மாற்று திறனாளிகளுக்கு உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுத்து நேற்று ((செப்டம்பர் 21)) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்து தேர்வுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு, அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதேசமயம், தேர்வர்களைவிட உதவியாளர்களின் கல்வி தகுதி குறைவாக இருக்க வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசாணையை அமல்படுத்தும்போது உள்ள இதுபோன்ற சிக்கல்கள் கலையப்பட்டு, திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.
[9/22, 13:31] Sekarreporter: டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வரும் அக்டோபர் 21 ம் தேதிக்குள் வெளியிடப்படும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது….

சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை கடந்த  ஆண்டு மார்ச் மாதம் 23 ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. ஏப்ரல் மாதம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. அது தொடர்பான  கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை  தெரிவிக்க  அவகாசம் வழங்கப்பட்டது.

பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல்,
வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையதல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என  மீனவ தந்தை கே.ஆர் செல்வராஜ் குமார் மீனவர் நல சங்கம் என்ற அமைப்பின் தலைவர் தியாகராஜன் வழக்கு தொடர்ந்தார்.

 அதை போல வரைவு அறிக்கை பிரிவுகளை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதை தமிழில் வெளியிட்டால் தான், தமிழக மக்களால் ஆட்சேபங்களை தெரிவிக்க முடியும் என்பதால் தமிழில் வெளியிட வேண்டும் எனவும், அதன் மீது கருத்துக்களை தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பூவிலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் வழக்கு தொடர்ந்தார்.  

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது,டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கை அக்டோபர் 21ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் அது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

வரைவு அறிக்கை குறித்த கருத்து கேட்பு விரிவாக நடத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து,கருத்து கேட்பு விரிவாக நடத்துவது குறித்து  மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்… 
[9/22, 13:57] Sekarreporter: கோவில் நிலம் தொடர்பாக உரிய விவரங்கள் இல்லாமல் பதில்மனு தாக்கல் செய்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏன் நடவடிக்கை எடுக்க கூடாதென விளக்கமளிக்க அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை என்னும் இடத்தில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக 400 ஏக்கர் நிலங்கள் இருந்த நிலையில், தற்போது ஏழு ஏக்கர் மட்டுமே கோவிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கோவில் நிலத்தை அளவீடு செய்து எல்லை வரையறை செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய கோவில் தனி அலுவலருக்கு உத்தர விடக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அம்மனுவில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதுடன், கோவிலில் இருந்து மாயமான செப்பு பட்டயத்தை கண்டுபிடித்து மீட்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காணாமல் போன செப்பு பட்டயம் குறித்தும்,
கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது,
அறநிலையத்துறை தஞ்சாவூர் இணை ஆணையர் தென்னரசு
பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில்,காணாமல் போனதாக கூறப்படும் செப்பு பட்டயம், புராதான பொருளாக அறிவிக்கப்பட்டு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதே போல, கோவிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், சில நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எத்தனை ஏக்கர் நிலம், யார் யாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது? ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலத்தின் அளவு குறித்த எந்த விவரங்களும் பதில் மனுவில் தெரிவிக்காத இணை ஆணையருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்துக்கு உரிய பதில் மனு தாக்கல் செய்யாத அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பி, அது தொடர்பாக அவரை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், கோவிலுக்கு சொந்தமான நிலங்களின் முழுமையான விவரங்களை 2 வாரங்களில் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய அறநிலையத்துறை செயலருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[9/22, 16:37] Sekarreporter: குத்தகைக்கு விடபட்டுள்ள கோவில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை மாற்றியமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் மேல்நிலை பள்ளி, அருள்மிகு செல்லாண்டி கோவிலுக்கு சொந்தமான 4.02 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று, பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த நிலத்திற்கு குத்தகை தொகை நிர்ணயிப்பது தொடர்பாக கோவில் செயல் அலுவலர் 2018ம் ஆண்டு ஜூலை 27ல் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த நோட்டீஸை ரத்துச் செய்யக்கோரி பள்ளி சார்பில் தாக்கல் செய்யபட்ட வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நோட்டீஸுக்கு பள்ளி நிர்வாகம் அளித்துள்ள ஆட்சேபனைகளை பரிசீலித்து 8 வாரத்திற்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க அறநிலைய துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.

தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குத்தகைக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறநிலைய துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை குத்தகை தொகையை மாற்றியமைக்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
[9/22, 18:08] Sekarreporter: நடிகை மீரா மிதுன் மட்டும் அவரது நண்பருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீரா மிதுன்,  பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில்வீடியோ ஒன்றை  வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  மேலும் மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த மாதம் 14 ம் தேதி  கைது செய்யப்பட்டனர்.புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.இந்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும் முதல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கோவில் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொண்டது சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்
[9/22, 22:06] Sekarreporter: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை தவிர வேறெந்த தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வார கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வாரினால் பல்லுயிரின வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை மேம்படுத்துவதற்கும், பாதுகாக்கவும் கடந்த 2012 ஆம் ஆண்டு ‘பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு ஆணையம்’ அமைக்கப்பட்ட போதும், ஆணையத்தின் மூலமாக அல்லாமல் தூர் வாரும் திட்டத்திற்காக 20.30 கோடி ரூபாயை நேரடியாக வனத்துறைக்கு வழங்கியது சட்ட விரோதம் எனவும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஹர்ஷராஜ் ஆஜராகி, சதுப்பு நிலங்களை பாதுகாக்க 20.30 கோடி ரூபாய், பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு ஆணையத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும், அதை உறுதி செய்யும் வகையில் விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும், சதுப்பு நிலத்தில் உள்ள இடிபாடுகளை அகற்றி, கரைகளை பலப்படுத்தவே தூர்வாரப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் இனிமேல் சதுப்பு நிலம் தூர்வாரப்பட மாட்டாது எனவும் உறுதி தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், மேற்கொண்டு வழக்கை பரிசீலிக்க எதுவுமில்லை எனக் கூறி முடித்து வைத்தனர்.

You may also like...