Madras high court march 18

[3/18, 11:15] Sekarreporter: அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரி ராம்குமார் ஆதித்தன் உள்பட இருவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அதிமுக மற்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த டிசம்பர் மாதம் நடந்த உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி ராம்குமார் ஆதித்தன் உள்பட இருவரும் தாக்கல் செய்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.

மனுவுக்கு பதிலளிக்கும்படி, அதிமுக கட்சிக்கும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[3/18, 14:24] Sekarreporter: கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த வழக்கில் இருந்து டிவிட்டர் நிறுவனத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தனக்கு எதிராக ட்விட்டர் சமூக ஊடகத்தில் ‘மீ டு’ புகார் தெரிவித்தது தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சுசிகணேசன் இணைவது போன்ற விவகாரங்கள் சமூக வலைதளங்களில் கடந்த ஆண்டு மீண்டும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சுசி கணேசன் குறித்து லீனா மணிமேகலையும், சின்மயியும் கருத்துக்களை பதிவிட்டனர்.

உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தனக்கு எதிராக லீனா மணிமேகலையும், பின்னணி பாடகி சின்மயியும் பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், கூகுள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களும், ((தி நியூஸ் மினிட்)) இணையதள செய்தி நிறுவனமும் பரப்பி வருவதால், தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டுமெனவும் இயக்குனர் சுசி கணேசன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள தங்களை நீக்க கோரி டிவிட்டர் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, டிவிட்டர் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவனம் என்பது ஒரு சமூக ஊடக வலைதளம் என்பதால், சுசி கணேசன் தொடர்ந்த வழக்கில் இருந்து தங்களை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

ஆனால் டிவிட்டர் நிறுவன தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வழக்கு குறித்து லீனா மணிமேகலை, சின்மயி, கூகுள், பேஸ்புக், டிவிட்டர், தி நியூஸ் மினிட் ஆகியோர் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 13ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[3/18, 14:44] Sekarreporter: பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி விளையாடி, அதை யூ டியூபில் பதிவேற்றம் செய்ததாக பப்ஜி மதன், அவரது மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது.

விசாரணையில், கொரோனா நிவாரண நிதிக்காக பல நபர்களிடம் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணம் வசூலித்து, அதை மோசடி செய்து சொகுசு கார்கள், நகைகள் வாங்கியது தெரிய வந்தது.

இதையடுத்து, பப்ஜி மதனின் கோடாக் மஹேந்திரா வங்கிக் கணக்கும், கிருத்திகாவின் ஆக்சிஸ் வங்கி கணக்கும் முடக்கப்பட்டன.

இந்நிலையில் சட்டவிதிகளின்படி வங்கிக் கணக்கு முடக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி, முடக்கத்தை நீக்க கோரி பப்ஜி மதனின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, வங்கிக் கணக்கை குறுகிய காலத்துக்கு தான் முடக்க முடியும் எனவும், நீண்ட காலத்துக்கு கணக்கை முடக்கி வைப்பது தனது சட்டப்பூர்வ உரிமையை பாதிக்கிறது எனவும் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து எந்த நோட்டீஸ் எதுவும் அளிக்கவில்லை என கிருத்திகா தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், சட்டப்படி வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் உள்ள ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் யாருக்கு சொந்தமானது என்பது சாட்சி விசாரணைக்கு பின் தான் தெரியவரும் என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து புலன் விசாரணை அதிகாரி முன் கூட்டி நோட்டீஸ் அனுப்பினால் அது ஆதாரங்களௌ அழிக்க வழி வகுத்து விடும் என்பதால், முடக்கம் குறித்து நோட்டீஸ் அளிக்க அவசியமில்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், வழக்கின் புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க கோரி சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் எனவும், மனுதாரர் மற்றும் காவல் துறையின் வாதங்களை கேட்டு, நீதிமன்றம் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்கலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
[3/18, 17:16] Sekarreporter: நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களை போல உருவாக்க முடியாது என்பதை கருத்தில்கொண்டு, பழமையான கோவில்களை பாதுகாக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டு வெள்ளையடிக்கப்படுவதாகவும், நாமக்கல் சோளீஸ்வரர் கோவிலின் பழமையான கற்கள் உடைக்கப்படுவதாகவும், இதேபோல் திருவெள்ளாறை கோவிலும் சேதப்படுத்தப்படுவதாக ரங்கராஜன் நரசிம்மன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத்துறை தரப்பில் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஈரோட்டில் உள்ள கோவில் ஒன்றின் பொங்கல் மண்டபம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் கோவிலின் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவல்களை போல அற்புதமான கட்டுமானத்துடனும், சிறந்த தொழில்நுட்பத்துடனும், முறையான ஆகம விதிப்படியும் கட்டமுடியாது என தெரிவித்தனர்.

அதனால் பழமையான கோவில்களை முறையாக புனரமைத்து,சிறப்பாக பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதையடுத்து, மனுதாரரின் புகார்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[3/18, 17:51] Sekarreporter: குற்றப்பத்திரிகை அசல் ஆவணங்களை வழங்க 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், மயிலாப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு 48 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்ததாக ரமேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன்பின்பு சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்லத்துரையை சுந்தரமூர்த்தி அணுகி அசல் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க கேட்டார்.

அதற்கு செல்லத்துரை 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் சுந்தரமூர்த்தி புகார் செய்ததன் அடிப்படையில், கையும் களவுமாக பிடிபட்டு, கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கை சென்னை லஞ்ச ஒழிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் விசாரித்தார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் செல்லத்துரை மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, 2 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
[3/18, 18:42] Sekarreporter: டி.கல்லுபட்டி பேரூராட்சி 10வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் முடிவுகளை மாற்றி அறிவித்ததற்கான உண்மையான காரணங்களை விளக்கி புதிய மனுவை தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22ம் தேதி எண்ணப்பட்டன. பேரூராட்சியின், 10 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்றனர்.

இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், திமுக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, டி.கல்லுபட்டி பேரூராட்சி 10 வது வார்டு கவுன்சிலராக மனுதாரர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தேர்தல் முடிவை மாற்றி அறிவிப்பதற்கான காரணத்தை விளக்கி மனுத்தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் அதிகாரி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பணி அழுத்தம் காரணமாக தவறுதலாக திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் முடிவை மாற்றி அறிவிக்க காரணம் என்ன என்பது குறித்த உண்மைகளை விளக்கி புதிதாக மனுத்தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
[3/18, 19:43] Sekarreporter: தமிழகம் முழுவதும் உள்ள 322 மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் 3 ஆயிரத்து 524 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகள் உள்ளது எனத் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த இழப்பீட்டுத் தொகைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இழப்பீடாக செலுத்தப்பட்ட ஒரு கோடியே 51 லட்சம் ரூபாயை நீதிமன்ற ஊழியர் கையாடல் செய்த விவகாரத்தை அடுத்து, இதுசம்பந்தமாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று குழுக்களை அமைத்து, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தவிட்டது.

அதன்படி ஆய்வு நடத்தி குழுக்கள் அளித்த அறிக்கைகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, தமிழகம் முழுவதும் உள்ள 322 மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் கடந்த ஜனவரி வரை, 3 ஆயிரத்து 524 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகள் உள்ளதாகவும், கோரப்படாத இழப்பீடுகளின் வட்டி மட்டும் 40 கோடி ரூபாய் வரை சேர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தயாரித்து, வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

மேலும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்கள் விசாரிப்பதற்கு பதில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் போல, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் தனி தீர்ப்பாயங்களை அமைக்கலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு என மேல் முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைப்பதன் மூலம், உயர் நீதிமன்றம், தனது அரசியல் சாசன விவகாரங்களில் கவனம் செலுத்த முடியும் எனவும் ஆலோசனை தெரிவித்தனர்.

விபத்து இழப்பீடுகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், உரியவர்களை அடையாளம் கண்டு இந்த தொகைகளை வழங்க வேண்டும் அல்லது அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடும்படி தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என தலைமை நீதிபதியை கேட்டுக் கொண்டனர்.

மேலும், வாகன விபத்து இழப்பீடுகள் டிபாசிட் செய்வதற்காக தனி வங்கிக் கணக்கை துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், விசாரணைையை ஏப்ரல் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[3/18, 21:01] Sekarreporter: நீதித்துறை மீது நம்பிக்கையில்லா நிலை உள்ளது – நிதியமைச்சர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்குரைஞர்களுக்கு சட்டப் புத்தகம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள பார் கவுன்சில் வளாக கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக நிதியமைச்சர் டாக்டர். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிதியமைச்சர் டாக்டர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
நிதி, பொருளாதாரம் என்பது ரகசிய சூத்திரம் கிடையாது. நிர்வாகத்தையும், சட்ட ஒழுங்கையும் பொது நிர்வாகம், சட்ட ஆட்சி, நல்ல நிறுவனம், திறமையான சந்தை, வெளிப்படையான சந்தை ஆகியவை நடந்தால் இயற்கையாகப் பொருளாதாரம் வளரும். அரசின் நிதிப் பெருகுவதோடு, சமுதாயம் முன்னேறும்.
ஆனால் வேறு எந்தவொரு ரகசிய சூத்திரமும் இல்லாமல் முதல்வரின் வழிகாட்டுதல்படி கடந்த 10 மாதங்களாக நிர்வாகத்தை சீர்திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது மாநிலத்தின் பொருளாதாரம், நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வர முடிந்துள்ளது. தொடர்ந்து அதை தக்க வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மாநில அரசின் கையில் இருக்கும் அதிகாரங்களை கொண்டும், முதல்வரின் வழிகாட்டுதல் படியும் சில நல்ல மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதை செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.
நீதித்துறை நல்லா வளர வேண்டும். ஆனால் தற்போது இந்தியாவில் அது முற்றிலும் நம்பிக்கையில்லாததாக உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி (சஞ்சிப் பானர்ஜி) இங்கே பதவியில் இருந்தபோது, அவர் என்னை சந்திக்க வேண்டுமென்று கூறினார்.
ஆனால் அப்போது அவரை சந்தித்திருந்தால் அரசியல் காரணங்களால் ஏதேனும் சிக்கல்கள் வருமோ என தயங்கி சந்திக்கவில்லை. அதற்குள் அவரை வேறு மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரே நேரில் சென்று சந்தித்தேன். அப்போது நீதித்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பட்டியலை என்னிடம் வழங்கினார்.
அப்போது அவரிடம் கட்டாயம் செய்து முடிப்போம். ஆனால் அதற்கு முழு ஒத்துழைப்பு வேண்டுமென தெரிவித்தேன்.
அவரிடம் கூறியது போல் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
[3/18, 21:02] Sekarreporter: அதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் நிதியின் மூலம் பணிகள் தொடங்கப்படும்.

கரோனா, மழை, வெள்ளம் போன்ற பல்வேறு தொடர் இடர்களால் நிதி நெருக்கடிகள் நிலவும் போது, மாநிலத்தின் கடன்சுமையை நிதியமைச்சர் குறைத்துள்ளார். வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்கள் சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கெனவே முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வழக்குரைஞர் துறையின் முக்கியத்துவம் தெரியும். எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களுக்கு உடனிருந்தவர்கள் வழக்குரைஞர்கள். எங்கு எல்லாம் நீதிமன்றங்கள் வேண்டுமோ, காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமோ அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும். காப்பீடு திட்டத்தில் வழக்குரைஞர்களை இணைப்பது ஒரு பெரிய விஷயமில்லை. வழக்குரைஞர் மருத்துவக் காப்பீடு திட்டம் குறித்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். அதேபோன்று வழக்குரைஞர்களுக்கான நல நிதியையும் உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...