Madras high court full click the link news 5/9/2021 இன்றைய கோர்ட் செய்தி ட்

[9/3, 11:11] Sekarreporter: தமிழ்கத்தில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொது நல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், 1998ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்துள்ளதாகவும், கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது எனவும், மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது எனவும் வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2008ம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதாகவும், குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் அந்த உத்தரவில் நீதிபதிகள், ஏற்கனவே உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது எனவும், ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்ய தேவையில்லை எனவும், இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
[9/3, 12:56] Sekarreporter: அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா என கண்காணிக்க, மருத்துவ கல்வி இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மேற்படிப்பு மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற நிர்பந்திக்கப்படுவதாக கூறி, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், பணிச்சுமை காரணமாக பயிற்சி மாணவர்கள் த்ற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணி நேர பணியை நிர்ணயித்து 2015ல் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பின் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுவதாக எந்த புகாரும் இல்லை எனவும், கூடுதல் பணி நேரம் ஒதுக்கியது குறித்து புகார் அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் மேற்படிப்பு மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[9/3, 14:33] Sekarreporter: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வி.கே.சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வ்ழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகிய 9 பேரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் கூடுதலாக சிலரை எதற்காக விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மனுதாரர்கள் விளக்கமாக கூறவில்லை என நீதிபதி சுட்டிக்காட்டினார். இதுதொடர்பாக மனுதாரர்கள் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், மூவரின் வழக்கு குறித்து மூன்று வாரங்களில் சோலூர்மட்டம் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[9/3, 15:57] Sekarreporter: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 16 கிரிமினல் அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரம் அற்ற குற்றசாட்டுகள் கூறியதாக 16 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டது.

இந்த நிலையில் அண்மையில் பொறுப்பேற்ற திமுக அரசு, கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எம்.பி, எம்.எல்.ஏ-களுக்கு எதிரான குற்ற வழக்குகளை திரும்ப பெரும் முன்னர் சம்மந்தபட்ட மாநில உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம்
கடந்த மாதம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை திரும்பப்பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாகவும் 16 வழக்குகளை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என கோரபட்டது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின்க்கு எதிராக நிலுவையில் உள்ள 16 கிரிமினல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற அனுமதிப்பது தொடர்பான மனு மீது வரும் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கபடும் என தெரிவித்து வழக்கை தள்ளிவைத்தார்.
[9/3, 16:44] Sekarreporter: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும், மேல் விசாரணை நடந்து வருவதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி சத்தியநாராயணனும், வழக்கு பதிவு செய்வதால் எந்த பயனும் இல்லை என கூறி நீதிபதி ஹேமலதா, வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் முன் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே ராஜேந்திரபாலாஜி தரப்பில் வாதம் முடிவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தனது வாதத்தை முன் வைத்தார்.

அப்போது அவர், ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டதாகவும், ஆனால், வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.

வழக்கை கைவிடுவதை பொறுத்தவரை முழுமையான நீதிமன்ற விசாரணைக்கு பிறகே முடிவு செய்ய முடியும் எனவும், ஆரம்பகட்ட விசாரணையை வைத்து முடிவெடுக்க முடியாது எனவும் தெரிவித்த அவர், தற்போது மேல் விசாரணை துவங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகும் கூட, மேல் விசாரணை நடத்தலாம் என உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளதாகவும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இந்த வாதத்திற்கு பதிலளிக்கவும் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதி நிர்மல்குமார், விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[9/3, 17:05] Sekarreporter: கட்டாய கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி செலவு தொகையை நிர்ணயித்து, தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டும்.

கடந்த 2016-17ம் ஆண்டில் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை கல்விச் செலவுத் தொகையாக தமிழக அரசு நிர்ணயித்து. அதன் பின், 11 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதை எதிர்த்த வ்ழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், 2020-21ம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி செலவுத் தொகையாக 12 ஆயிரம் ரூபாயை நிர்ணயித்து தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்தும், கல்வி செலவுத் தொகையை மறு நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டதை மறு நிர்ணயம் செய்யக்கோரியும், 2020 – 2021ம் கல்வியாண்டுகளில் நியாயமான செலவை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[9/3, 17:34] Sekarreporter: 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி தொடர்பான நோட்டீசை எதிர்த்து
ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை மூன்று வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

ஃபிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தை மீறி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டு எழுந்தது. மேலும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அதன் நிறுவனர்கள் உட்பட 9 பேருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, அதை ஏன் சந்திக்கக் கூடாது என்று அதற்கான உரிய விளக்கத்தை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது.

இந்த நோட்டீசை எதிர்த்து , பிளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை அமலாக்கப்பிரிவு இந்த நோட்டீசை அனுப்பியதால் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி இருந்தார்.

அந்த மனுவில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து தான் 2010 ஆம் ஆண்டு விலகி விட்டதாகவும் தனக்கும் தற்போது நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.. ஏற்கனவே பலமுறை இதுகுறித்து அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாக 12 வருடங்கள் கழித்து தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எனவே நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை கடந்த 12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். சச்சின் பன்சால் குறித்து 3 வாரத்துக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
[9/3, 17:47] Sekarreporter: சமூக வலைதள பயனாளர்களால் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் பதிவிடப்பட்டால் அவற்றை சமந்தப்பட்ட நிறுவனங்களே நீக்கும் வகையிலும், வெளியீட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக கூறி, அதை தடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் மற்றும் பிரபல பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகளில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு துறை சார்பில் அதன் துணை செயலாளர் அமரேந்தர் சிங் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் செய்திகளை ஒழுங்குபடுத்தவுமே விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஒரு சட்டத்தால் தடை செய்யப்பட்ட விஷயங்களை வெளியிடவோ, பரப்பவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமை இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, அண்டை நாட்டு உறவை குலைக்கும் தகவலை பகிர்வது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையிலேயே சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஓ.டி.டி. தளங்களில் பதிவேற்றம் செய்பவற்றை 7 மற்றும் 13 வயதினருக்கானது என வகைப்படுத்தி வெளியிட வேண்டும் என விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின் கீழ் மூன்று குறைதீர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நிறுவனமும் குறைதீர் அமைப்புகளை வைத்திருக்க வேண்டும் எனவும், அவை சுய ஒழுங்குமுறை அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திலும் ஒரு குழு இருக்கும் என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுக வலைதளங்கள் மட்டுமல்லாமல், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஆட்சேபனைக்குரிய பதிவை அரசோ அல்லது நீதிமன்றமோ தான் நீக்கும் வகையில் இருந்த விதிகளை மாற்றி, சம்பந்தப்பட்ட வெளியீட்டு நிறுவனங்களே முடக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி வெளியீட்டாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையிலேயே விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது என்றும் பதில்மனுவில் சுட்டிக்கப்பட்டப்பட்டுள்ளது.

விதிகளை கொண்டுவர அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், அரசியல் சாசன விதிகளை மீறவில்லை என்றும், அதனால் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணையை, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
[9/3, 17:48] Sekarreporter: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கை, ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது

தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து, உதவிப் பொறியாளர் தேர்வில் கலந்து கொண்ட இருவர் சார்பில் முறையிடப்பட்டது

பணம் வாங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு வேலை வழங்கியதால், தகுதியானவர்களுக்கு வாய்ப்பு பறிபோய்விட்டதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

எத்தனை ஆண்டுகள் கழித்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினாலும் அவர்களை விசாரிக்க வேண்டியது உயர் நீதிமன்றத்தின் கடமை எனக் கூறிய நீதிபதி, இடையீட்டு மனுதாரர்கள் ஏற்கனவே தாக்கல் செய்து நிலுவையில் உள்ள வழக்கை, இந்த வழக்கோடு சேர்த்து பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
[9/3, 18:03] Sekarreporter: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அறப்போ இயக்கம் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அரசை விமர்சித்த எதிர்கட்சிகள், பத்திரிகைகள் மீது நூற்று ஐம்பதுக்கும் மேல் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்கள், வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், பத்திரிகைகள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகளை வாபஸ் பெற அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் மீது முறையே கடந்த 2014 மற்றும் 2018ல் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான மனுவை அரசாணையுடன் மாநகர அரசு வழக்கறிஞர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை பரிசீலித்த நீதிபதி செல்வகுமார், வழக்குகளை வாபஸ் பெற அனுமதித்து உத்தரவிட்டார்.
[9/3, 19:48] Sekarreporter: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் இரண்டாவது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில்
வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி கைது செய்யப்பட்டடு
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது நீதிமன்ற காவல் வரும் 9 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில் ஜாமீன் வழங்க கோரி,
மீரா மிதுனும், சாம் அபிஷேக்கும் இரண்டாவது முறையாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்

20 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாலும்,
பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாலும்,
தான் பெண் என்பதை கருத்தில் கொண்டும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென மீரா மிதுன் கோரியிருந்தார்

இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசுத்தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சத்யா,
பட்டியலின் மக்களை புண்படுத்தும் வகையில் மீரா மிதுன் பேசி இருப்பது சமுதாயத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும்,
இதில் பாலின ரீதியான முன்னுரிமை வழங்க கூடாதெனவும்,தற்போது ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என் எதிர்ப்பு தெரிவித்தார்

அதே போல மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கும் எல்லா வகையிலும் மீரா மிதுனின் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும், மீரா மிதுனின் வீடியோக்களை படம் பிடிப்பதும் பதிவேற்றம் செய்வதும் அவர்தான் எனவும் எடுத்துரைத்தார்

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வகுமார், மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

You may also like...