Madras high court deceber 8 order

[12/7, 10:58] Sekarreporter 1: மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது.

இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும், வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி, ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று, விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
[12/7, 14:40] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்காக அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது..

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர்
கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிலத்தை காலவரம்பு இல்லாமல் குத்தகைக்கு விடபடுகிறதா என்பது குறித்து விளக்கமளிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை மாதம் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்க இருப்பதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை மறுநிர்ணயம் செய்யப்படும் என்றும் வழங்கப்பட்ட நோக்கத்திற்கு அல்லமால் வேறு நோக்கத்திற்காக நிலத்தை பயன்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான பிற வழக்குகள் பட்டியிலிடப் படாததால் அனைத்து வழக்குகளையும் சேர்த்து பட்டியலிடும் படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.
[12/7, 16:46] Sekarreporter 1: புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென ரிலையன்ஸ் ரீட்டெய்ல் மற்றும் பிலிப்ஸ் டிவி நிறுவனங்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான கே.செல்வக்குமாரசாமி மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் உள்ள ரிலையன்ஸ் ஷோரூமில் 49 இன்ச் அளவிலான ஹெச்.டி. தரத்திலான பிலிப்ஸ் டிவியை கடந்த 2017ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். ஒரு வாரத்திலேயே டிவி பழுந்தானது குறித்து புகார் அளித்த நிலையில், அதை சரிசெய்தும் மீண்டும் பழுதானதால் நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஷோரும், பிலிப்ஸ் டிவி நிறுவனம், சர்விஸ் செய்யும் சென் டெக் நிறுவனம் ஆகியவை எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து நுகர்வோர் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், மூவரும் சேர்ந்து டிவியின் விலை 65 ஆயிரத்து 390 ரூபாய், நேர கிரயம், மன உளைச்சல் ஆகியவற்றிற்கான இழப்பீடாக ஒரு லட்ச ரூபாய், வழக்கு செலவு தொகை 10 ஆயிரம் ரூபாய் என ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 390 ரூபாயை இரண்டு மாதங்களில் புகார்தாரருக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
[12/7, 17:52] Sekarreporter 1: தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் விரிவாக்கத்துக்கு தேவைப்படும் புறம்போக்கு நிலத்துக்கு பதில், பட்டா நிலங்களை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொள்ள அனுமதித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரிவுபடுத்த, அரசு புறம்போக்கு நிலத்தைக் கொடுத்து, பதிலுக்கு பட்டா நிலங்களை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொள்ள அனுமதித்து கடந்த மே மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து புதுச்சேரியைச் சேர்ந்த சூர்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழக அரசின் இந்த அரசாணை, அரசு புறம்போக்கு நிலங்கள், சிறிய நீர்நிலைகளை ஆக்கிரமிக்க வழிவகை செய்கிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் பொது பயன்பாட்டுக்குரியது என்பதால் அவற்றை தனியாருக்கு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ய அனுமதிப்பது, நீர்நிலைகளுக்கு மட்டுமல்லாமல், நீர்நிலைகளை இணைக்கும் கால்வாய், ஓடைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும், அதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின் அடிப்படையில் நில பரிமாற்றத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு நிலம் பரிமாற்றம் செய்வது தொடர்பான அரசாணையில் நீர்நிலைகளை பாதுகாக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[12/7, 18:06] Sekarreporter 1: கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தொடர்ந்த தேர்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பணபட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் பாண்டியராஜன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் நேரில் ஆஜராகி, சாட்சி கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித்தார்.

அப்போது அவர், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட 28 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறிய குற்றச்சாட்டை மறுப்பதாகவும், முறையாக தேர்தல் கணக்கை தாக்கல் செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தல் வழக்கில் கூறப்பட்ட மற்ற குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார்.

பாண்டியராஜனிடம் திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தரப்பு குறுக்கு விசாரணை முடிவடையாததால், வழக்கின் விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

You may also like...