Madras high court 25th news

[9/26, 07:47] Sekarreporter.: தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்படி பழங்குடியின, பட்டியலின மாணவர்களிடம் வசூலித்த விண்ணப்பக் கட்டணத்தை திருப்பி செலுத்திவிட்டதாக சென்னை குரு நானக் கல்லூரி அளித்த விளக்கத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது

ததமிழ்நாடு அரசின் உத்தரவுகளுக்கு முரணாக சென்னை வேளச்சேரி குரு நானக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வழங்கும்போது, பட்டியலின பழங்குடியின மாணவர்களிடமும் இளநிலை படிப்புகளுக்கு 300 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 500 ரூபாயும் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் எஸ்சி எஸ்டி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் கே. கண்ணையன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.காஞ்சனா, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார், குரு நானக் கல்லூரி தரப்பில் வழக்கறிஞர் கார்த்திக் சேஷாத்திரி ஆகியோர் ஆஜரானார்கள்.

குரு நானக் கல்லூரி தரப்பில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் வசூலித்த கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் விண்ணப்பக் கட்டணம் எவ்வாறு வசூலிப்பது, கூடுதலாக வசூலித்த தொகையை திருப்பி செலுத்துவது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் மூலம் அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டு, அனைத்து மண்டலங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தையும், பிற மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கட்டணத்தையும் கல்லூரிகள் திருப்பி செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, குரு நானக் கல்லூரிக்கு எதிரான வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
[9/26, 07:47] Sekarreporter.: தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1949ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் வனங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரபட்டது. இந்த சட்டப்பிரிவின்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் அனுமதி இல்லாமல் வனப்பகுதி நிலங்களின் உரிமையாளர்கள், அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கவோ, குத்தகைக்கு விடவோக்கூடாது என்று கூறுகிறது.

இந்தநிலையில், 2011ல் இந்த சட்டத்தில் புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு திருத்தம் கொண்டு வரபட்டது. அந்த திருத்ததின் படி, குழுவின் முன் அனுமதியோடு வன நிலங்களின் உரிமையாளர்கள், அதை வேறு ஒருவருக்கு விற்கலாம் என்றும், அதனை வாங்குபவர்கள் அந்த வனப்பகுதியை தானே வைத்து கொள்வதற்கு அரசுக்கோ, குழுவுக்கோ விண்ணப்பம் அளித்து அனுமதி பெறுவதற்கும் வகை செய்யபட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவை எதிர்த்து சென்னை அண்ணா நகரை சேர்ந்த முருகவேல் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், வனப்பகுதியை சட்டவிரோதமாக வாங்கியவர்கள் குழுவிடம் விண்ணப்பித்து உரிமை பெறுவது என்பது சட்டவிரோத விற்பனைக்கு ஒப்புதல் அளிப்பது போல் இந்த சட்டப்பிரிவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2002ல் 26 சதவீதம் காடுகள் இருந்ததாகவும், தற்போது 20.27 சதவீதமாக சுருங்கி விட்டதாகவும், இந்த சட்ட பிரிவினால் காடுகள் அழிக்கபட்டுவிடும் என்பதால், இந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 6 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
[9/26, 07:47] Sekarreporter.: திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் வண்டல் மற்றும் சவுடு மண் எடுக்க அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு கனிம வளத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பழைய பல்லாவரத்தை சேர்ந்த பி.சசிதரன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் களிமண், சவுடு மண், கிராவல் ஆகியவற்றை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் கடந்த 2017 ஏப்ரல் 27ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருநிலை மற்றும் புதுவயல் கிராமங்களில் உள்ள குளங்களில் சிறு கனிம சலுகை விதிமுறைகளுக்கு முரணாக சவுடுமண், வண்டல்மண் எடுக்க கவுரிசங்கர், முத்துராஜ் ஆகியோருக்கு ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். விதிகளுக்கு முரணாக சவுடு மண், வண்டல்மண் எடுக்க தரப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திருவள்ளூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[9/26, 07:47] Sekarreporter.: திருவண்ணாமலை மாவட்டத்தில்
குட்டை புறம்போக்கு நிலத்தில் வணிக வளாகம் கட்ட பேரூராட்சிக்கு தடை
ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, செப்.26&
அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்த குட்டை புறம்போக்கு நிலத்தில் வணிக வளாகம் கட்ட களம்பூர் பேரூராட்சிக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, களம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழரசன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:&
விளையாட்டு மைதானம்
களம்பூர் பேரூராட்சியில் குட்டை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அரசு ஆரம்பப் பள்ளியின் விளையாட்டு மைதானமாக இதுவரை பயன்படுத்தி வருகின்றனர். 5 வகுப்பு வரையுள்ள இந்த பள்ளியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மைதானத்தில் தான் அந்த மாணவர்கள் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி வருகின்றனர். பள்ளியின் ஆண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இந்த இடத்தில் தான் நடந்தது வருகிறது. பொதுமக்களும் காலையில் இந்த மைதானத்தில் தான் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்தநிலையில், இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு களம்பூர் பேரூராட்சி செயல் அதிகாரி திட்டமிட்டுள்ளார்.
விளையாட்டு கிடைக்காது
பள்ளிக்கூடத்துக்கு அடுத்த மைதானத்தில் வணிக வளாகம் கட்டினால், பொதுமக்கள் வருகையால் எந்நேரமும் சத்தமாக கேட்கும், மாணவர்களால் அமைதியான மனநிலையில் கல்வி கற்க முடியாது. மேலும், விளையாட்டு என்பது மாணவர்களுக்கு முற்றிலும் கிடைக்காமல் போய்விடும். மேலும் குட்டை புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்தும் பொதுமக்கள் சார்பில் கடந்த 7&ந்தேதி செயல் அதிகாரிக்கு மனு கொடுத்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, இந்த இடத்தில் சட்டவிரோத வணிக வளாகம் கட்ட தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
தடை
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.சிலம்பு செல்வன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, குட்டை புறம்போக்கு நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு களம்பூர் பேரூராட்சி செயல் அதிகாரிக்கு த-டை விதித்து, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
………………..
[9/26, 07:47] Sekarreporter.: சிட்லபாக்கம் ஏரியின் புலப்படம் மற்றும் ஏரியை சுற்றியுள்ள கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும், ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பையை அகற்றவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் பாதுகாப்பது, சட்டவிரோதக் கட்டுமானங்களை தடுப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிட்லபாக்கம் ஏரியை பொறுத்தவரை அங்குள்ள விதிமீறல் மற்றும் அனுமதியின்றி கட்டபட்டுள்ள கட்டிடங்களை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அப்பணிகள் முடிந்ததும் அறிக்கை அளிக்கவுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதனையடுத்து, சிட்லப்பாக்கம் ஏரியின் புலப்படம், ஏரியைச் சுற்றியுள்ள கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள், அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...