Judge Mahadevan ,judge v parthiban judge p t asha j பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் குப்பைக்கிடங்குகளை அமைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் குப்பைக்கிடங்குகளை அமைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள வடவள்ளி பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்காக திறந்தவெளி நிலம் மற்றும் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைக்கிடங்கு அமைக்கும் முடிவை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க ஆதரவாகவும், எதிராகவும் தீர்ப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், வி.பார்த்திபன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட அமர்வு, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியம் என்றும், கழிவுகள் மற்றும் குப்பைகள் இல்லாத சுத்தமான சுற்றுச் சூழலை உருவாக்க வேண்டியதும் அரசின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தும் வகையில் பூங்கா மற்றும் திறந்தவெளி நிலத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் குப்பை கிடங்கு அமைக்கும் முடிவு அனுமதிக்கக் கூடிய ஒன்றுதான் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும் மாநில, மாவட்ட, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான குழுக்களை அமைக்க வேண்டுமென்றும், விதிமீறல் இருப்பதாக தெரிந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க அந்த குழுக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

பூங்காக்கள் முறையான பராமரிப்பில் உள்ளதா என்பதையும் அந்த குழுக்கள் தான் பரிசீலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். பூங்கா மற்றும் திறந்தவெளி நிலங்களில் அமைக்கப்படும் குப்பை கிடங்குகள் பயன்படாத நிலைக்கு போய்விடாமல் இருப்பதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டு, அதற்கான விதிகளை வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

குப்பை கிடங்குகளை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.

You may also like...