Judge Dandhabani order தொழிலதிபரை கடத்தி சென்று சொத்துக்களை எழுதி வாங்கிய வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு

 

தொழிலதிபரை கடத்தி சென்று சொத்துக்களை எழுதி வாங்கிய வழக்கில்
போலீஸ் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு

சென்னை, நவ.4&
தொழிலதிபரை குடும்பத்துடன் கடத்திச் சென்று சொத்துக்களை எழுதி வாங்கி வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துள்ளது. இதையடுத்து முன்ஜாமீன் மனுவை போலீஸ் அதிகாரிகள் தரப்பில் திரும்ப பெறப்பட்டது.

சென்னை முகப்பேரை சேர்ந்த ராஜேஷ் என்ற தொழிலதிபரை அவரது குடும்பத்தினருடன் கடத்திச் சென்று பண்ணை வீட்டில் அடைத்து வைத்து கடந்த 2019&ம் ஆண்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் ஒரு கும்பல் எழுதி வாங்கியது. இதுகுறித்து ராஜேஷ் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் கோடம்பாக்கம் ஸ்ரீ, திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்&இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் 3 போலீஸ்காரர்கள் என்று மொத்தம் 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கோடம்பாக்கம் ஸ்ரீ மட்டும் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை போலீசார் கைது செய்ய வில்லை.
முன்ஜாமீன்
இந்தநிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சப்&இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், போலீஸ்காரர் கிரி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதவி கமிஷனர் உள்பட 6 பேரை அரசு பணியிடை நீக்கம் செய்ய வில்லை. அவர்களை கைது செய்யவும் இல்லை என்று நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, எழுதி வாங்கிய சொத்துக்களை மீண்டும் புகார்தாரர் பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும். போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
பணியிடை நீக்கம்
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, குற்றச் செயலில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உதவி கமிஷனரை பணியிடை நீக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுÕÕ என்றார்.
அதிகாரிகளின் உத்தரவு
இதையடுத்து நீதிபதி, சொத்து புகார்தாரர் பெயருக்கு மாற்றப்பட்டு விட்டதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, இல்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, காசு கொடுத்து சொத்து வாங்கியவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பது தான் இந்த ஐகோட்ட்டின் எண்ணம் என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ÔÔஇந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முதல் இரு நபர்களுக்கு இந்த ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. 2 பேருக்கு மாவட்ட கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. மனுதாரர்கள் போலீஸ் அதிகாரிகள். உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி தான் மனுதாரர்கள் செயல்பட்டுள்ளனர். சொத்துக்களை எழுதி வாங்கிய விவகாரத்தில் மனுதாரர்களுக்கு தொடர்பு இல்லைÕÕ என்று வாதிட்டார்.
திரும்ப பெற அனுமதி
இதை ஏற்க மறுத்த நீதிபதி, ÔÔபோலீஸ் அதிகாரிகளான மனுதாரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தீவிரமானது. அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாதுÕ என்றார். இதையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறியதை ஏற்றுக் கொண்டு, மனுவை திரும்ப அனுமதித்து, தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
…………………..

You may also like...