Gst cheating case pnpj bench order

ஜி.எஸ்.டி. வரி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு, வீட்டுக்காவலில் இருந்த இரண்டு தென்கொரியர்கள் தப்பிச் சென்றது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சோவல் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சோய் யோங் சுக், பொது மேலாளர் சோ ஜோவான் ஆகியோர் ஜி.எஸ்.டி. வரியாக வாடிக்கையாளர்களிடம் வசூலித்த 40 கோடியே 37 ஆயிரத்து 448 ரூபாயை, மத்திய அரசுக்கு செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரித்த ஜி.எஸ்.டி. உதவி ஆணையர் உத்தரவுப்படி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2019ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

பின், ஜாமீன் பெற்ற அவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள அயல்நாட்டினருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் இருவரும் தொடர்ந்த வழக்கில், ஓரகடத்தில் உள்ள அவர்களது வீட்டிலேயே காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்திருந்தது.

வீட்டுக்காவலில் இருந்தபோது அக்கம்பக்கதினரின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி, போலி பாஸ்போர்ட் பெற்றதாக பாலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி இருவரும் தப்பி விட்டதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இருவர் மீதும் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி முகாமில் அடைக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இருவரும் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, இருவரும் ஓரகடத்திலிருந்து தப்பித்து, ஹைதராபாத் வழியாக மணிப்பூர் வரை சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்தியா – மியன்மார் எல்லையில் வெளியேறியுள்ளதாக சந்தேகிப்பதாகவும், அதற்கு தென் கொரிய தூதரக அதிகாரிகளே உடந்தையாக இருந்ததாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, பிறரின் ஆவணங்களை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் பெற்றது மற்றும் வீட்டுக்காவலில் இருந்து தப்பி சென்றது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள இரு வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இரு வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டுமென செங்கல்பட்டு எஸ்.பி.-க்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்குகள் தொடர்பாக சிபிஐ ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கி, அதுகுறித்த அறிக்கையை ஜனவரி 25ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை தள்ளிவைத்துள்ளனர்.

You may also like...