Chief justice bench முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அறப்போர் மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அறப்போர் மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கை காட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு ரூ. பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். 942 கோடி ரூபாய் அளவுக்கு உபரி வருவாயைக் கொண்டிருந்த சென்னை மாநகராட்சி எஸ்.பி.வேலுமணியின் தவறான நிர்வாகத்தால் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், 2018 செப்டம்பர் 12ஆம் தேதியன்று சிபிஐ மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்ததில், 2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சுற்று சுவர் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல், போன்றவைகளுக்காக KCP இன்ஜினியர்ஸ், SP பில்டர்ஸ் நிறுவனங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகளில் வேலுமணி தாக்கல் செய்த பதில் மனுவில், அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுத்ததாகவும், மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தலையிடுவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். தான் எம்.எல்.ஏ.வாகும் முன்பே தன் சகோதரர்களின் நிறுவனங்கள், கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரராக இருந்துள்ளதாக விளக்கம் அளித்திருந்தார். மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன டெண்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் துவங்க முடியாது என தெரிவித்திருந்தார். டெண்டரில் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள் தன்னுடைய அரசியல் விரோதிகளுக்கும், டெண்டர் கிடைக்காதவர்களுக்கும் நிழலாக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், தனது பெயரையும் தான் சார்ந்துள்ள கட்சியின் பெயரையும் களங்கப்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால்,. மேற்கொண்டு இந்த விவகாரத்தை நிலுவையில் வைக்காமல் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என தெரிவித்தார்.

அறப்போர் இயக்கம் தரப்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ் ஆஜராகி, வேலுமணி மீது வழக்குபதிவது மட்டும் கோரிக்கை அல்ல என்றும், உடந்தையாக இருந்தவர்கள், பலனடைந்தவர்கள் ஆகியோரை வழக்கில் சேர்க்கும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் எனவும், மேற்கொண்டு நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என தெரிவித்தார்.

திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விட்டதால், தங்கள் வழக்கை முடித்து வைக்கலாம் என தெரிவித்தார்.

வேலுமணி தரப்பில் வக்கீல் இளங்கோவன் சார்பாக மூத்த வக்கீல் சதீஸ்பராசரன் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தனக்கு எதிரான வழக்கு எந்த அடிப்படையில் பதிவு செய்யபட்டுள்ளது என்பது தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என தெர்வித்தார்.

இதையடுத்து இரு வழக்குகபின் விசாரணையையும் அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

You may also like...