Admk case senior msk and former aag sr argument super for sasikala senior advt

அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தன்னை பொதுச்செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் இருபத்தி ஒன்பதாம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கட்டுப்படுத்தும் என அறிவிக்கக் கோரியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களான பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் சென்னை நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணனும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் ராஜகோபாலும் வாதிட்டனர்.

அவர்கள், இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், ஏற்கனவே கட்சி உரிமை கோரிய வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என அறிவித்து தேர்தல் ஆணையமும், டில்லி உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.

அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும், கட்சியும், சின்னமும் தங்களிடம் தான் இருப்பதாகவும், தேர்தல் ஆணையமும் இதை உறுதி செய்துள்ளதாகவும் பன்னிர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.

சசிகலா தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

வழக்கில் வாதம் முடிவடையாததால் வழக்கு விசாரணை அக்டோபர் 27க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

You may also like...