Acting chief justice order மணவர்கள் நலன்கருதி தடுப்பூசி

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

அறம் அறக்கட்டளையின் தலைவரான ஏ. உமர் பாருக் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், கொரொனாவை எதிர்கொள்வதற்கான தடுப்பூசியை போட அனைத்து தரப்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகள் நீட்டிப்பு உத்தரவை பின்பற்றி அரசு துறைகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென வற்புறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

கல்வி நிலையங்களை திறந்து நேரடி வகுப்புகளை அரசு அனுமதித்துள்ள போதும், கட்டாய தடுப்பூசி சுற்றறிக்கையால் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் இன்னலுக்கு உள்ளாவதாகவும் மனுவில் குறுப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என மத்திய அரசோ, மாநில அரசோ உத்தரவாதம் அளிக்காத நிலையில், தடுப்பூசி செலுத்த கட்டயப்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என தெரிவித்தனர். சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பபடாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது எனவும் அறிவுறுத்தினர். மேலும் தடுப்பூசியை இலவசமாக வழங்க முன்வர வேண்டுமென உச்ச நீதிமன்றம் வலியுறுத்ததை சுட்டிக்காட்டி, இந்த வழக்கு பொது நலனுடன் தொடரப்பட்டுள்ளதாக தெரியவில்லை என தெரிவித்தனர்.

தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், நாளை இதற்கு மாற்று கூட வர வாய்ப்புள்ளது என்றும் மாணவர்களின் நலன் கருதியே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...