Aag kummaresan filed report in police orderly case sm subrmaniyam passed direction again

ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உத்தரவிடப்பட்ட வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரம்ணியம் முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன், தமிழகத்தில் காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, பணியை துவங்கினால் மட்டும் போதாது எனவும், அனைத்து ஆர்டர்லிகளையும் ஒரே உத்தரவில் திரும்பப் பெற வேண்டும் எனவும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அகில இந்திய பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த 1979ம் ஆண்டே ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டும், அது இன்னும் தொடர்கிறது எனவும், அதை உடனடியாக ஒழிக்க வேண்டுமெனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

திருநெல்வேலியில் உள்ள காவல்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு 39 ஆர்டர்லிகள் உள்ளதாக தகவல் வந்துள்ளதாக அதிர்ச்சி தெரிவித்த நீதிபதி, உங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை பராமரிக்க பயிற்சி பெற்ற காவலர் வேண்டுமா? உங்கள் நாயை நீங்கள் பராமரிக்க வேண்டியது தானே? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், காவல் துறை அரசின் முழு கட்டுப்பாட்டில் தான் இயங்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அது பேராபத்தாகி விடும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து அரசுத் தரப்பில், தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறையினர், காவல்துறை என்றோ, அதற்கான சின்னத்தையோ ஒட்டக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், உயரதிகாரிகள் விதி முறைகளை கடைபிடிப்பது அரசு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற பணியாளர் தனது வாகனத்தில் உயர் நீதிமன்றம் என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதாக போலீஸ்காரர் ஒருவர் தனக்கு கடிதம் எழுதியதாக குறிப்பிட்ட நீதிபதி, அதை தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தார். முதலில் நம்மை திருத்தியாக வேண்டும் எனவும் கூறினார்.

பணியில் இருக்கும் காவல்துறை உயரதிகாரிகளை விட ஓய்வு பெற்றவர்கள் அதிக சலுகைகளை வைத்துக் கொண்டிருப்பது ஆபத்தானது என சுட்டிக்காட்டிய நீதிபதி, பல மாநிலங்களில் ஆர்டர்லி முறை ஒழிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆர்டர்லி முறை இன்னும் தொடர்கிறது. இது உயரதிகாரிகளின் ஆங்கிலேயே காலனிய மனநிலையை காட்டுகிறது என்றார்.

காவல்துறை உயரதிகாரிகள் ஆர்டர் முறையை இன்னும் பின்பற்றினால் அது அரசு உத்தரவை மதிக்காதது போன்றது எனத் தெரிவித்த நீதிபதி, 1979ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காகிதத்தில் மட்டுமே இருப்பதை ஏற்க முடியாது என்பதால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இரு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

உயரதிகாரிகள் தங்களது ஆர்டர்லிகளை தாமாக முன்வந்து விட்டுகொடுக்க வேண்டும் எனவும், உயரதிகாரிகள் ஆர்டர்லி வைத்திருப்பதாக புகார் அல்லது தகவல் அவர்கள் மீது நன்னடத்தை விதியின் கீழ் தமிழக உள்துறை முதன்மை செயலாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...