வனக்குற்றங்களை தடுப்பதற்கான அதிரடிப்படையை நியமிப்பது தொடர்பாக ஏப்ரல் 27ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வனக்குற்றங்களை தடுப்பதற்கான அதிரடிப்படையை நியமிப்பது தொடர்பாக ஏப்ரல் 27ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகள் வேட்டையாடப்படுவது, தற்செயல் மரணத்தைத் தடுப்பது தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரித்து வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு மாநில வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு அதிரடிப்படையை அமைக்கு வேண்டுமென தெரிவித்திருந்தனர். சிபிஐ எஸ்பி ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கையில், கைப்பற்றப்பட்ட தந்தைகளை அடையாளம் காண்பதிலும், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநில உயர் அதிகாரிகளை ஒருங்கிணைப்பதிலும் சிரமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன உயிரின காப்பாளராக இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ள சேகர் குமார் நீரஜ்ஜை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்க வனத்துறை செயலாளர் தகுந்த நடவடிக்கையை எடுக்கவும், வழக்கில் கேரள மாநில வனத்துறை செயலாளரை தாமாக முன்வந்து இணைத்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கேரள வனத்துறை சார்பில் காணொலி காட்சி மூலம் ஆஜரான அதிகாரி, சிறப்பு அதிரடிப்படையில் தங்கள் மாநிலம் சார்பில் இடம்பெறும் அதிகாரிகளின் விவரங்களை தெரிவிக்க 3 வாரங்கள் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து நீதிபதிகள், வனக்குற்றங்கள் தொடர்பாக இரு மாநில வனத்துறை, காவல்துறை உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு அதிரடி படையை உருவாக்குவது குறித்து உத்தரவிடப்படும் என தெரிவித்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...