மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கருத்துகளையும் பெற்ற பிறகே தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கருத்துகளையும் பெற்ற பிறகே தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய உயர் கல்வித் துறை சார்பு செயலாளர் தினேஷ் டி. பாலி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை நாடு முழுவதும் இரண்டரை லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 6,600 வட்டாரங்கள், 6,000 ஊரக உள்ளாட்சி அமைப்புகள், 676 மாவட்டங்கள், 36 மாநிலங்களுடனும், பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய இடைநிலை கல்வி வாரியம், கல்வி நிறுவனங்கள், அரசு துறைகளுடனும் கலந்தாலோசித்து தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைகளை ஆராய்ந்த, மத்திய அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு, 2016ம் ஆண்டு இறுதியில் அறிக்கை தாக்கல் செய்ததாகவும், அதனடிப்படையில் 2017ம் ஆண்டு பிரபல விஞ்ஞானி கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் வரைவு தேசிய கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டதாகவும் பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த குழு, 2019 ல் வரைவு கொள்கையை மத்திய அரசிடம் சமர்பித்ததாகவும், அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யபட்டு கல்வி தொடர்புடையவர்களின் கருத்துகளையும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கருத்துகளையும் பெற்ற பிறகே, 2020ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், அவற்றின் ஆளுனர்கள் மற்றும் துணைநிலை ஆளுனர்கள் உள்ளிட்டோரிடம் 2020 செப்டம்பர் முதல் 2022 ஜனவரி வரை பல்வேறு கடிதப் போக்குவரத்து, பயிற்சி வகுப்புகள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் ஆகியவற்றை நடத்தி உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியோடு நிறுத்திவிடாமல் தேசிய கல்வி கொள்கையை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் எவ்வாறு அமல்படுத்தப்பட்டு, வெற்றி காணப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...