ப்ளஸ் 2 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்காக நடத்தப்படும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ப்ளஸ் 2 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்காக நடத்தப்படும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், நடப்பு கல்வியாண்டில் ப்ளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 10 மற்றும் 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ப்ளஸ் 2 மதிப்பெண்கள் கண்க்கிடப்பட்டு ஜூலை 31ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூடுதல் மதிப்பெண்கள் பெற தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தடை விதிக்க கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் அடிப்படையில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தினால், கூடுதல் மதிப்பெண் பெற தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு, வெறும் யூகத்தின் அடிப்படையில் இந்த  வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், பாதிக்கப்படும் மாணவர்கள் இந்நீதிமன்றத்தை அணுக எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

You may also like...