பச்சையப்பன் அறக்கட்டளை  நிர்வாகிகள் தேர்தலை மூன்று மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னையில் விசாரணை மதுரையில் உத்தரவு

பச்சையப்பன் அறக்கட்டளை  நிர்வாகிகள் தேர்தலை மூன்று மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடுகள் நடப்பதாக எல்.செங்குட்டுவன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், அறக்கட்டளையின் அறங்காவலர் தேர்தல் நடத்த தடை கேட்டும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.இந்த வழக்குகளை கடந்த ஆண்டு விசாரித்த தனி நீதிபதி அறக்கட்டளை நிர்வாகியாக உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகத்தை அறக்கட்டளை  தலைவராக இந்த நீதிமன்றம் நியமிப்பதாகவும், அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான அண்ணா அரங்கம், அம்மா அரங்கம் ஆகியவை முகூர்த்தம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகையை  ரத்து செய்து, குத்தகை எடுத்த நிறுவனம்  அரங்கங்களை 10 நாட்களுக்குள் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு, மீண்டும் இந்த வழக்கை நீதிபதி அனைத்து அம்சங்களோடு தனி நீதிபதி எம்.சுந்தர் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் இருதரப்பு வாதங்களை கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள நீதிபதி எம்.சுந்தர் இன்று வழங்கியுள்ள தீர்ப்பில்,பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை புதிய திட்டத்தின் கீழ், மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அறக்கட்டளை தொடர்பான வழக்குகளை சிவில் வழக்காக தொடர வேண்டும்,
அறக்கட்டளை தேர்தலை சொத்தாட்சியர் அரசு தலைமை வழக்கறிஞர் உடன் கலந்து ஆலோசித்து நடத்தி முடிக்க வேண்டும் என்று
வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டுள்ளார்.
 

You may also like...