நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளுக்காக டெண்டர் கோரும்போது வெளிப்படை தன்மையை உறுதி செய்யும்

நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளுக்காக டெண்டர் கோரும்போது வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் உரிய விதிகளை கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பம்மல் நகராட்சியில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் கழிவுநீர் பாதைகளை சுத்தம் செய்யும் பணிக்காக கடந்த 2020 டிசம்பர் 8ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டரில் பலர் பங்கேற்றனர். இறுதியில் டெண்டர் டி.பன்னீர்செல்வம் என்பவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த டெண்டரை ரத்து செய்யக்கோரி கே.அன்னபூரணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.சரவணன், அரசு தரப்பில் வக்கீல் ஆ.செல்வேந்திரன் ஆஜராகினர்.
மனுதாரர் வக்கீல் ஏ.சரவணன் வாதிடும்போது, டெண்டர் நிபந்தனைகளை பன்னீர்செல்வம் நிறைவேற்றவில்லை. கடன் பெறுதல் தொடர்பான சான்றிதழை அவர் தாக்கல் செய்யவில்லை. பன்னீர்செல்வத்திற்கு தொழில்நுட்ப ரீதியான தகுதி இல்லை. இருந்தபோதும், ெடண்டர் நடைமுறைகளை பின்பற்றாமல் டெண்டர் தரப்பட்டுள்ளது. டெண்டர் ஆவணங்கள் டெண்டர் திறப்பிற்கு முன்பே பிரிக்கப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறியிருந்தார்.

பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.ஜானகிராமன் வாதிடும்போது, டெண்டர் நடைமுறைகள் உரிய முறையில் கடைபிடிக்கப்பட்ட பிறகே டெண்டர் தரப்பட்டுள்ளது என்றார்.
பம்மல் நகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் பி.ஸ்ரீநிவாஸ் வாதிடும்போது, டெண்டர் திறக்கப்படவிருந்த நாளில் நகராட்சி நிர்வாக ஆணையர் நடத்திய ஆய்வு கூட்டத்திற்கு பம்மல் நகராட்சி ஆணையர் சென்றுவிட்டார். அதனால் டெண்டர் தள்ளிவைக்கப்பட்டு மறுநாள் டெண்டர் பிரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் டெண்டர் பதிவேட்டில் கையெழுத்திட்டார். இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய டெண்டரை அறிவித்து நடைமுறைகளை முடிக்க 45 முதல் 60 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் பம்மல் நகராட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்படுகிறது.
இந்த வழக்கில் மனுதாரர் அதிகாரிகள் மீது எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. மாறாக டெண்டர் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டு. டெண்டர் விஷயத்தில் தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். டெண்டர் முன்பணம் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட வேண்டும். டெண்டர் அறிவிக்கப்பட்டபிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நிபந்தனைகளில் சலுகை காட்டக்கூடாது. ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான தொகையுடைய டெண்டர்கள் வெளிப்படையான முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். டெண்டர் நடவடிக்ைககள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று எதிர் மனுதாரர் தரப்பு வக்கீல் கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே, டெண்டர் நடவடிக்கைகளில் ஊழலை தவிர்க்கவும், ஒருசார்பு நிலையை எடுப்பதை தடுக்கவும் அரசு உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் பணிகளுக்கான டெண்டர் கோரும்போது தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

You may also like...