திருப்பூர் பல்லடம் சின்னக்குட்டை குளத்தின் ஆக்கிரமிப்புகளை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் பல்லடம் சின்னக்குட்டை குளத்தின் ஆக்கிரமிப்புகளை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா கரடிவாவி கிராமத்தை சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம் கரடிவாவி கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் சின்னக்குட்டை என்ற குளம் உள்ளது. சுமார் 6 ஏக்கர் பரப்பில் உள்ள இந்த குளத்தை நம்பி விவசாயம் நடைபெற்று வந்தது. அது மட்டுமல்லாமல் இந்த குளத்தின் மூலம் நிலத்தடி நீரும் வற்றாமல் இருந்து வந்தது. மழை நீர் இந்த குளத்தில் சேர்வதால் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலை இருந்தது.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிலர் இந்த சின்னக்குட்டை குளத்தை ஆக்கிரமிக்க தொடங்கினர். முதலில் ஒரு சென்ட் இடம் என்று ஆரம்பித்து படிப்படியாக 5 சென்ட், 10 சென்ட் என்று குளத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விட்டனர்.
அதுமட்டுமல்லாமல், பெரிய வீடுகள், குடோன்களை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். விசைத்தறி கூடங்கள், கோழி வளர்ப்பு கூடங்கள் என குளத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளதால் குளத்திற்கு தண்ணீர் வரும் வழி முழுவதும் அடைக்கப்பட்டுவிட்டது.
இந்த கிராமத்தின் செயலாளராக 25 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் ராஜாமணி என்பவர் சின்னக்குட்டையை ஆக்கிரமித்து பெரிய வீட்டை கட்டியுள்ளார். சுமார் 39 ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீட்டு வரிக்கான ரசீதும் கொடுத்துள்ளார்.
குளம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் குளத்தை நம்பியுள்ள ஆயக்கட்டுதாரர்கள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள சின்னக்குட்டையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் குளத்தை ஆக்கிரமித்த பஞ்சாயத்து செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் புருஷோத்தமன் ஆஜராகி, கடந்த 2017 முதல் மனுதாரர் குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற போராடுகிறார். ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்துவருகிறது. பல ஏழை மக்கள் அந்த பகுதியில் குடியிருக்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏழைகள் குடியிருக்கிறார்கள், நீண்ட காலமாக குடியிருக்கிறார்கள் என்ற காரணங்களை ஏற்க முடியாது. மனுதாரர் குறிப்பிட்டுள்ள சின்னக்குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 10 நாட்களுக்குள் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

You may also like...