தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு பாராட்டு விழா நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது. விழாவில் சங்க துணைத் தலைவர் வேதவல்லி குமார் வரவேற்றார். சங்கத் தலைவர் கே.சாந்தகுமாரி தலைமை வகித்தார். சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா, உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கண்ணம்மாள், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமி்ழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் எல்.விக்டோரியா கவுரி, அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.ரேவதி தேவி, தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் ஆர்.தேன்மொழி உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஏற்புரையாற்றி பேசுகையில், நீதிபதிகள் சமுதாய கட்டமைப்பை உணர்ந்து பணியாற்றினால் தான் சிறப்பான தீர்ப்பை அளிக்க முடியும். சட்டத்தி்ன் பலனை சமுதாயத்தில் உள்ள ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியாக கொண்டு சேர்க்க வேண்டும். ஒரு ஏழை நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுகிறார் என்றால் அது அவருடைய தவறு அல்ல. இந்த சமுதாய கட்டமைப்பின் தவறு. பெண்கள் எப்போதுமே போராளிகள்தான். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் அல்ல முன்னாள் தான் பெண் இருக்கிறாள். அந்தளவுக்கு பெண்களுக்கு கடமைகள் அதிகம். பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அனைத்து மட்டங்களிலும் சிறப்பாக நிறைவேற்றும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவது பாராட்டுக்குரியது. நீதித்துறை அதிகாரிகள் பணியிடத்திலும் 50 சதவீதம் அளவுக்கு பெண்கள் உள்ளனர். பரந்த மனப்பான்மையுடன் செயல்பட்டால் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை சட்ட ரீதியாக அதிகரிக்க முடியும். பெண்கள் நீதித்துறைக்கு அதிகமாக வரவேண்டும். ஏனெனில் பெண் வழக்கறிஞர்களி்ன் தேவை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம்  கொலை வழக்குகளும், சிவில் வழக்குகளும் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது அவை குறைந்து ஒயிட்காலர் குற்றங்கள், சைபர் குற்றங்கள் என குற்றங்கள் தொழில்நுட்ப ரீதியாக அதிகரித்து வருகிறது. எனவே வழக்குகளின் தன்மைக்கேற்ப இளம் பெண் வழக்கறிஞர்களை அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். பெண்களுக்கு பெண்களே எதிரி என்ற நிலையை மாற்றி, பெண் வழக்கறிஞர்கள், சங்க நிர்வாகிகள் தங்களுக்குள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தகுதியான  பெண் வழக்கறிஞர்களை நீதிபதியாக கொண்டு வருவதில் எனது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும், என்றார்.
விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.தண்டபாணி, டி.பரத சக்ரவர்த்தி, மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் வி.ஆர்.கமலநாதன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் துணைத்தலைவர் ஆர்.சுதா, உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லுாயிசால் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் ஜெ.ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.

You may also like...