சென்னை அம்பத்தூரில் ஏலச் சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரனை ஆணையராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை அம்பத்தூரில் ஏலச் சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரனை ஆணையராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள அம்பத்தூர் நாடார்கள் தர்ம பரிபாலன சங்கத்தின் நிர்வாகிகள் காசிராஜன், காஞ்சிராஜன் பாஸ்கரன், செல்வராஜ் உள்ளிட்டோர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஏலச்சீட்டு தொகையை முறையாக திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதில் 52 பேரிடம் சுமார் 3கோடியே 50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கபட்டது.

புகாரின் பேரில் மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காசிராஜன் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் இவர்கள் தொடர்புடைய காஞ்சிராஜன், செல்வராஜ், செல்வம், பாஸ்கரன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் தாங்கள் ஏமாற்றிய ஏலச்சீட்டு பணத்தை முழுவதுமாக முதலீடு செய்தவர்களுக்கு திருப்பித் தருவதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரனை ஆணையராக நியமிப்பதாகவும், இவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணம் செலுத்தியதற்கான ரசிது உள்ளிட்ட ஆவணங்களை அளித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் இந்த ஆதாரங்களை வருகிற டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் நீதிபதி ஆணையத்திடம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார். உரிய ஆதாரங்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான முதலீட்டு தொகையை திரும்ப வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் காஞ்சிராஜன் உள்ளிட்டோர்க்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்குவதாகும் இவர்கள் பணத்தை திருப்பி செலுத்தும் வரை விசாரணை அதிகாரியிடம் திங்கட்கிழமை அன்று நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...