குளத்தை தூர்த்து நீத்தார் நினைவு கூடம் கட்டப்படுவதை அகற்றுவது குறித்து அரசு பரீசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

குளத்தை தூர்த்து நீத்தார் நினைவு கூடம் கட்டப்படுவதை அகற்றுவது குறித்து அரசு பரீசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் உளுத்தூர் தலைக்குளம் கிராமத்தை சேர்ந்த க.சுந்தரராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அந்த கிராமத்தில் பொதுமக்கள், கால்நடைகள், விவசாயம் என அனைத்திற்கும் நீராதாரமாக இருந்த வச்சானி அம்மன் குளத்தை தூர்த்து, இறந்தவர்களுக்கான நீத்தார் நினைவு கூடம் கட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரின் கணவர்கள் சேர்ந்து 10 ஏக்கர் பரப்பளவிலான குளத்தை தூர்ப்பதாகவும், குளக்கரையில் உள்ள அரசு நிலம் துணைத்தலைவரின் கணவர் ஆக்கிரமிப்பில் உள்ளதால், குளத்தை தூர்ப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வருவாய் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர், தமிழக அரசு ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், நீத்தார் நினைவு கூடத்தை அகற்ற உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீர் வரத்துக்கு எந்த இடையூறும் இல்லை என்பதை உறுதி செய்யவும், மனுதாரரின் கோரிக்கை பரிசீலித்து முடிவெடுக்கவும் அரசிற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், கட்டுமானங்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

You may also like...