கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மதிப்பீடு செய்ய இரு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மதிப்பீடு செய்ய இரு மதிப்பீட்டாளர்களை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, வீரசோழபுரம், அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்டோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே உறுதி அளித்தபடி, கோவில் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கவில்லை எனவும், தொகுப்பு நிதி உருவாக்கப்படவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நிலத்தை மதிப்பீடு செய்வதற்காக சுதந்திரமான மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, குழந்தை வடிவேல், பெரியசாமி ஆகிய இரு மதிப்பீட்டாளர்களின் பெயர்களை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பரிந்துரைத்தார். அதேபோல கோவிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

அவர்கள் இருவரையும் மதிப்பீட்டாளர்களாக நியமித்து, கோவில் நிலத்தை சுதந்திரமாக மதிப்பீடு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள்,மதிப்பீட்டாளர்களின் அறிக்கையில் திருப்தியடைந்தால் கட்டுமான பணிகளை தொடர அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

மேலும், கோவிலுக்கு விரைந்து அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...