கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து சென்னை

கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேவை வாய்ப்பில் பின்பற்றபடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன. அதில் 2021 சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன், அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாகவும் முழுமையாக இல்லாமல் அவசர கதியில் இந்த சட்டம் இயற்றபட்டுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுக்களில் தெரிவிக்கபட்டது.

இந்த வழக்கில் இடை மனுதராராக உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் போட்டியிட முடியவில்லை என 1989ம் ஆண்டுகளில் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், வன்னியர்கள் உள்ளிட்ட 106 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரின் அறிக்கையின் அடிப்படையில், மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சீர்மரபினர் மற்றும் பிற பிரிவினருக்கு முறையே 7 மற்றும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் குறிப்பிட்ட ஜாதியினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு எனவும், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்னியர் ஜாதியினருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆய்வு செய்ய நீதிபதி குலசேகரன் கமிட்டி அமைக்கப்படவில்லை எனவும், தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யலாமா, வேண்டாமா என்பதை ஆய்வு செய்யவே அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதால், இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் அந்த பதில் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

You may also like...