ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: சபாநாயகர் ஏன் செயல்படாமல் இருக்கிறார்?- உச்ச நீதிமன்றம் கேள்வி

Homeதமிழகம்இந்தியாஉலகம்வணிகம்விளையாட்டுசினிமாக்ரைம்ஆன்மிகம்ஜோதிடம்ஆல்பம்சமையல்வீடியோக்கள்சமூக வலைதளம்கருத்துப் பேழைஇணைப்பிதழ்கள்தொழில்நுட்பம்இலக்கியம்விவாதக் களம்வலைஞர் பக்கம்தொடர்கள்காமதேனுபிரசுரங்கள்இ-பேப்பர் சந்தாபிரிண்ட் சந்தாஇ-பேப்பர் படிக்கClose Menu

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: சபாநாயகர் ஏன் செயல்படாமல் இருக்கிறார்?- உச்ச நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவுPublished: 16 Jun, 20 06:51 pmModified: 16 Jun, 20 06:51 pm   

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகர் ஏன் இன்னும் செயல்படாமல் உள்ளார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது அரசுக்கு எதிராக ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் செயல்பட்டதாகக் கூறி தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், வெற்றிவேல் உள்ளிட்டோர் சார்பில் சபாநாயகரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது, ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சபாநாயகர் முடிவில் தங்களால் தலையிட முடியாது என்றும் சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தது.

மேலும், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மூன்று வருடம் காலதாமதம் செய்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்த விவகாரத்தில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஆனால் அதன் பிறகும் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதால், உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக தரப்புக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ”உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்கள் கடந்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் சபாநாயகர் மேற்கொள்ளவில்லை” என வாதிட்டார்.

இதனையடுத்து தலைமை நீதிபதி, ”நாங்கள் உத்தரவு பிறப்பித்த பிறகுதான் கரோனா தொற்று அதிகரித்தது. எனவே, சபாநாயகரும் இந்த இக்கட்டான சூழலில் என்ன செய்ய முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதேவேளையில் சபாநாயகர் தனபால் தரப்புக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம், ”இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஏன் இதுவரை முடிவெடுக்கவோ, நடவடிக்கையொ எடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்தத் தகுதி நீக்கப் புகார் மீது, சபாநாயகரை உடனடியாகச் செயல்படச் சொல்லுங்கள் என மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதனையடுத்து இந்த வழக்கில் அடுத்தகட்ட வாதங்களுக்காக 15 நாள் கழித்து விசாரிக்கிறோம் எனக்கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You may also like...