ஊத்துக்கோட்டை தாலுகா பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்தில் உள்ள ஆக்கிரமிப்பை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் உதவியுடன் 2 வாரங்களில் அகற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல்கள் ஜி.கிருஷ்ணராஜா, ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்

  1. ஊத்துக்கோட்டை தாலுகா பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்தில் உள்ள ஆக்கிரமிப்பை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் உதவியுடன் 2 வாரங்களில் அகற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊத்துக்கோட்டை தாலுகா பெரியபாளையத்தில் உள்ள ஓம் ஸ்ரீ பவானி அம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் லோகமித்ரா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோயில் உள்ளது. கோயிலுக்கு செல்வதற்காக எல்லாபுரம் பஞ்சாயத்து யூனியனில் 683.5 சதுர மீட்டர் வழி உள்ளது. இந்த நிலம் கோயிலின் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் கோயில் வழி நிலத்தை ஏலம் விடுவதற்காக அறிவிப்பை எல்லாபுரம் பஞ்சாயத்து யூனியன் 1972ல் வெளியிட்டது. இதை எதிர்த்தும் சம்மந்தப்பட்ட நிலம் கோயிலுக்கு சொந்தமானது என அறிவிக்க கோரி கோயில் சார்பில் திருவள்ளூர் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
    இதையடுத்து, கோயில் சார்பில் செங்கல்பட்டு சார்பு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்மந்தப்பட்ட இடம் கோயிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, கோயில் சார்பில் அந்த நிலத்திற்கு பட்டா கோரி ஊத்துக்கோட்டை தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கோயிலுக்கு செல்லும் வழியில் இருபுறமும் சிலர் சட்டவிரோதமாக சில் கடைகளை கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அறநிலைய துறை திருவள்ளூர் உதவி ஆணையருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
    அதன்படி அந்த கடைகளை அகற்றுமாறு சம்மந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இடங்களை காலி செய்யவில்லை. இந்த நிலையில் சம்மந்தப்பட்ட இடம் எல்லாபுரம் பஞ்சாயத்து யூனியனுக்கு சொந்தமானது என்று எல்லாபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆணையர் அந்த இடத்தில் நோட்டீஸ் போர்டையும் வைத்துள்ளார். அந்த நோட்டீசை அகற்றுமாறு பஞ்சாயத்து யூனியன் ஆணையருக்கு கடிதம் எழுதியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி கோயில் நிலத்தை மீட்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், எஸ்பி, ஊத்துக்கோட்டை தாசில்தார் ஆகியோர் உதவிடுமாறு உத்தரவிட வேண்டும்.
    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
    இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல்கள் ஜி.கிருஷ்ணராஜா, ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து ஏன் இதுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு திருவள்ளூர் கலெக்டர், எஸ்பி, உத்துக்கோட்டை தாசில்தார் ஆகியோர் அறநிலைய துறை அதிகாரிகளுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை 2 வாரங்களில் அகற்றி ஆகஸ்ட் 12ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

You may also like...