உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு..

*❀❀❀🌏தமிழ்☯️செய்திகள்🤝❀❀❀*

*🌏☯️🤝உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு..!*

🌏ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கட்டுப்படுத்துவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு சாதகமாக செயல்படுவதாகவும், ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலரை நேரடியாக என்.வி.ரமணா கட்டுப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தனது அரசுக்கு எதிராக நீதிபதிகளை செயல்பட வைக்கவும், சந்திரபாபு நாயுடு பலனடையும் வகையில் நடவடிக்கைகள் இருப்பதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அமராவதியை தலைநகராக மாற்றும் முயற்சியில் நடைபெற்ற நில அபகரிப்பு ஊழல் தொடர்பாக தனது அரசு நடவடிக்கை எடுத்தால் அதனை உயர் நீதிமன்றம் தடுப்பதாகவும் ஊடகங்கள் இது குறித்த செய்திகளை வெளியிடக் கூடாது என தடை உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதாகவும் ஜெகன் தெரிவித்துள்ளார்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது நேரடியான அரசியல் சார்ந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருப்பது நீதித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்.வி.ரமணா உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ள நிலையில், தற்போதைய தலைமை நீதிபதி இந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதும், மத்திய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கப்போகிறது உள்ளிட்ட பல கேள்விகளை இந்த கடிதம் தற்போது ஏற்படுத்தியுள்ளது

*🌏☯️🤝கொரோனாவுக்கு உலக அளவில் 10,77,458 பேர் பலி*

🌏டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.77 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,77,458 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 37,459,161 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 28,111,951 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 68,611 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*🌏☯️🤝வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை; கிம் ஜாங் அன் பேச்சு*

🌏வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டத்தில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இதன்பின்னர் கிம் கூடியிருந்த பார்வையாளர்களின் முன் உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, கொரோனா வைரசின் பாதிப்புக்கு ஒருவர் கூட ஏற்படாமல் நல்ல உடல் ஆரோக்கியமுடன் மக்கள் இருப்பதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உலகம் முழுவதற்கும் பெரும் தீங்கு ஏற்படுத்தி வரும் இந்த தொற்றுநோயில் இருந்து நம்முடைய மக்கள் அனைவரையும் நாம் காப்பாற்றியிருக்கிறோம் என்ற உண்மையானது நம்முடைய இயற்கையான பணியாகும். இது நம்முடைய கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

எனினும், இந்த வெற்றியை தொடர்ந்து, மக்களின் ஆரோக்கிய தோற்றத்தினை காணும்பொழுது, நன்றி கூறுவதற்கு தவிர வேறு வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை என்று கூறினார்.

அவர் பின்பு தொடர்ந்து, வடகொரிய மக்கள் அவர்களாகவே மிக பெரிய வெற்றியை சாதித்து இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். வடகொரியாவின் அண்டை நாடான சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டு பின்னர் பல நாடுகளிலும் தீவிர பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி வரும் சூழலில், எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்புகள் இல்லை என வடகொரியா கூறி வந்தது கவனத்தில் கொள்ள கூடியது.

*🌏☯️🤝தெருவில் வைத்து மாமியாரை துன்புறுத்திய மருமகள்*

🌏ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மல்லேபள்ளி என்ற இடத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மாமியாரை வீட்டுக்கு வெளியே தெருவில் வைத்து அடித்து துன்புறுத்தி, அவரது ஆடைகளை மருமகள் உருவும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், 55 வயது மதிக்கத்தக்க மாமியார் தஸ்நீம் சுல்தானாவை மருமகள் உஸ்மா பேகம் தொடர்ந்து அடிக்கிறார். இதற்கு முன்னதாக, மாமியார் தஸ்நீமை உஸ்மாவின் தாய் அஷிபா பேகம் அடித்துள்ளார். பின்னர்தான் மருமகளும் இணைந்து மாமியாரை அடித்துள்ளனர் என போலீசார் விசாரணையில் கூறப்படுகிறது.மாமியாரை அவரது மருமகள் நடுரோட்டில் இழுத்துப் போட்டு அடித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே சண்டை இருந்து வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் மாமியார், மருமகள் இருவரும் தனித்தனியாக குடியிருந்து வருகின்றனர். கீழ் வீட்டில் மாமியார் குடியிருந்து வருகிறார்.

மேல் மாடியில் இருக்கும் தனது மருமகளின் இல்லத்திற்கு செல்லும் தண்ணீரை மாமியார் நிறுத்தி இருக்கிறார். இதுதான் சண்டைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உஸ்மா பேகத்தின் கணவர் உபைத் அலி கான் சவுதி அரேபியாவில் வசித்து வருகிறார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். கடந்தாண்டு தான் இருவருக்கும் திருமணமாகி இருக்கிறது. சவுதி அரேபியாவில் தனது கணவருடன் பேசுவதற்கு மற்றும் அவருடன் செல்வதற்கு மாமியார் அனுமதிப்பதில்லை என்று மருமகள் குற்றம்சாட்டியுள்ளார்.போலீசார் தற்போது மாமியார், மருமகள் இருவருக்கும் கவுன்சிலிங் செய்து வருகின்றனர்.

*🌏☯️🤝பிரான்சில் சோகம் – விமான விபத்தில் 5 பேர் பலி*

🌏பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள லொச்சிஸ் நகரில் இருந்து நேற்று இரவு இலகுரக விமானம் ஒன்று 2 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தது.

அதேபோல், நாடியா செக்ஹயர் நகரில் இகுந்து லொச்சிஸ் நகர் நோக்கி டிஏ40 என்ற சுற்றுலா பயணிகள் விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது.

எதிர்பாராத விதமாக இலகுரக விமானமும், சுற்றுலா விமானமும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*🌏☯️🤝கேரள தங்க கடத்தல் விவகாரம் – ஸ்வப்னா சுரேஷ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு*

🌏கேரளா தலைநகர் திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையத்தில் கடந்த ஜூலை 5-ந் தேதி ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டதை, சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சுங்கத் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரள அரசின் தகவல்தொழில்நுட்பத் துறை பிரிவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்வப்னா சுரேஷ், திரிசூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சுங்கத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் ஸ்வப்னா சுரேஷ் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அவரை கைது செய்ய சுங்கத்துறை பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

ஒருவர் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் பட்சத்தில் அவரை விசாரணை இன்றி ஒரு ஆண்டு வரை தடுப்புக் காவலில் வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

*🌏☯️🤝சாதி, மதம் ரீதியாக சமூகத்தை எதிர்க்கட்சிகள் பிரிக்க முயற்சி – யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு*

🌏உத்தரபிரதேசத்தில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் 6 தொகுதிகளை பா.ஜனதாவும், ஒரு தொகுதியை சமாஜ்வாடியும் வைத்திருந்த நிலையில், இந்த தொகுதிகளை மீண்டும் வெல்வதில் ஆளும் பா.ஜனதா முனைப்பு காட்டி வருகிறது.

ஏற்கனவே அரசுக்கு தேவையான பெரும்பான்மை இருந்தாலும், இந்த தொகுதிகளை வெல்வதை கவுரவ பிரச்சினையாக கருதுகிறார், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத். எனவே இந்த இடைத்தேர்தல் பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.

சமீபகாலமாக அவரது அரசு பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக சமீபத்திய ஹத்ராஸ் தலித் இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் போலீசாரின் என்கவுண்ட்டர் போன்ற சம்பவங்களால் யோகி ஆதித்யநாத் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.

கொரோனாவுக்கு மத்தியில் முதன்முதலாக நடைபெறும் இந்த தேர்தல்களில் வெற்றிக்கொடியை நாட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்தவகையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தியோரியா சதர் சட்டசபை தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் மத்தியில் நேற்று அவர் மெய்நிகர் முறையில் உரையாற்றினார். அப்போது அவர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தை சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் 15 ஆண்டுகள் ஆட்சி செய்தன. அப்போது வெறும் ஊழல்களும், அராஜகமுமே அவர்களது சாதனையாக இருந்தன. ஆனால் பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்த 6 ஆண்டுகளில்தான் மாநிலத்தில் உண்மையான வளர்ச்சி தொடங்கியது. அனைத்து ரக வளர்ச்சி காரணமாக மக்களிடம் பா.ஜனதாவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரிக்கிறது. மக்களிடம் நேர்மறை எண்ணங்களும் ஏற்பட்டு உள்ளன.

இதனால் துயரமடைந்துள்ள எதிர்க்கட்சிகள் விரக்தியின் உச்சிக்கு சென்றுள்ளன. எனவே இந்த அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக எல்லாவித தந்திரங்களையும் மேற்கொண்டு வருகின்றன. அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் மோசமானவை. நோக்கங்கள் அபாயமானவை.

பிரிவினை என்பது அவர்களது மரபணுவிலேயே இருக்கின்றன. அதன்படி முதலில் நாட்டை அவர்கள் துண்டாடினர். தற்போது சாதி, இனம், மத ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு தங்கள் சொந்த நலனே முக்கியம். மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

*🌏☯️🤝சிறந்த நிர்வாகம் தந்த தமிழகம் : ஊழல் அதிகாரிகளால் அதிருப்தி*

🌏மதுரை : ‘ஒரு காலத்தில் நிர்வாகத்தில் தமிழகம் சிறந்து விளங்கியதாக கருதப்பட்டது. ஊழல் அதிகாரிகளால் அப்பெயர் மறைந்து விட்டது’ என அதிருப்தியை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்துள்ளது.

மதுரையில் ஒருவருக்குச் சொந்தமான நிலம் ஏற்கனவே சர்வே செய்யப்பட்டதாகவும், அதை மீண்டும் சர்வே செய்ய வி.ஏ.ஓ., கட்டாயப்படுத்துவதாகவும், அதற்கு தடைகோரியும் வழக்கு தாக்கலானது.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு: சொத்துக்களை சர்வே செய்வதில் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பின்பற்ற வேண்டும். சர்வே அல்லது மறு சர்வே தொடர்பான மனுக்கள் கிடைக்கப் பெற்ற, 30 நாட்களில் சர்வே செய்ய வேண்டும். தவறினால் விண்ணப்பத்தை கட்டணத்துடன் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் சம்பளத்தில், 2, 500 பிடித்தம் செய்ய வேண்டும். கடமை தவறும் மற்றும் தவறு செய்யும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை, சஸ்பெண்ட், பணி நீக்கம் செய்ய வேண்டும்.

பதவி உயர்வை தவிர்க்கும் வகையில், தவறான நடவடிக்கைகள் குறித்து பணிப் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். யார், யாருக்குச் சொந்தமான இடம் சர்வே செய்யப்பட்டது, அவை எங்கு அமைந்துள்ளன, சர்வே செய்த தேதி, சர்வே செய்த அலுவலர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பதிவேட்டை பராமரிக்க வேண்டும். அதை உயரதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். சர்வே விபரங்களை தகவல் உரிமைச் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது வேறு யாரும் கோரினால் வழங்க வேண்டும்.

வருவாய்த்துறையில் அலுவலர்கள் மற்றும் குறிப்பாக சர்வேயர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க, லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நிறைவேற்ற தமிழக அரசு ஒரு மாதத்தில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.

அரசிடம் சம்பளம் பெறுவதை மறந்துவிட்டு, அதிகாரிகள் தங்கள் பணியைச் செய்யவே லஞ்சம் கேட்கின்றனர். சில சர்வேயர்கள் வருவாய்த்துறை பணியில் சேர்ந்து அரசின் வருவாயை பெருக்குவதிற்கு பதில், தங்கள் வருவாயை பெருக்குவது பற்றி சிந்திக்கின்றனர். ஒரு காலத்தில் நிர்வாகத்தில் தமிழகம் சிறந்து விளங்கியதாக கருதப்பட்டது. ஊழல் அதிகாரிகளால் அப்பெயர் மறைந்துவிட்டது.இவ்வாறு நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார்.

*🌏புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த கார் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு*

🌏குன்னத்தூர்: புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த கார் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மாமல்லபுரம் அடுத்த குன்னத்தூரில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

*❀❀❀🌏தமிழ்☯️செய்திகள்🤝❀❀❀*

You may also like...