இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கட்டாய கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி செலவு தொகையை நிர்ணயித்து, தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டும்.

கடந்த 2016-17ம் ஆண்டில் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை கல்விச் செலவுத் தொகையாக தமிழக அரசு நிர்ணயித்து. அதன் பின், 11 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதை எதிர்த்த வ்ழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், 2020-21ம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி செலவுத் தொகையாக 12 ஆயிரம் ரூபாயை நிர்ணயித்து தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்தும், கல்வி செலவுத் தொகையை மறு நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டதை மறு நிர்ணயம் செய்யக்கோரியும், 2020 – 2021ம் கல்வியாண்டுகளில் நியாயமான செலவை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...