அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன் வைக்கப்பட்ட முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

இதுசம்பந்தமான அறிக்கை,
இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 24ம் தேதி நேரில் ஆஜராக ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்கு கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது எனவும், இதை கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தங்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக நாளை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதால் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நீதிபதி நிர்மல்குமார் முன் முறையிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் வழக்குகள் வெள்ளிக்கிழமை தான் பட்டியலிடப்படும் என தெரிவித்தார். அதேசமயம், விசாரணை நீதிமன்றத்தில் ஏதேனும் எதிர்மறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அப்போது உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதி அனுமதியளித்தார்.

You may also like...