அரசு வழக்கறிஞர்கள், நேர்மையாக செயல்பட வேண்டும் எனவும் அவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டால் குழப்பங்கள் தான் ஏற்படும் என தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

லஞ்ச புகாரில் சிக்கிய திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக இருந்த தனலட்சுமி நீக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய தனலட்சுமி மீது லஞ்ச புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை நீக்கி தமிழக அரசு 2019ல் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, அரசு சிறப்பு வழக்கறிஞராக நீடிக்க உத்தரவிடக் கோரி தனலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தனது கடின உழைப்பால் 439 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாகவும், 16 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் தனலட்சுமி தரப்பில் வாதிடப்பட்டது.

மொட்டை கடிதத்தின் அடிப்படையில், தன் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதை மறுத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், மொட்டை கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், திருவள்ளூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புகார் மீது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் விசாரணை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை பெற்ற பிறகே சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் லஞ்சம் பெற்று வழக்கை பலவீனமாக்கியுள்ளதாகவும், இந்த வகையில் 150 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகியுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் லஞ்சம் கேட்டதற்கும், வழக்குகளில் சமரசம் செய்து வைத்ததற்கும் ஆதாரங்கள் உள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், உண்மை என்பது சூரியன் போன்றது எனவும் அதை எப்போதும் மறைக்க முடியாது என்றும், ஒவ்வொரு வழக்கறிஞரும் நீதிமன்ற அதிகாரிகள் எனவும், நீதி பரிபாலனத்துக்கு அவர்கள் தான் முக்கிய தூண்கள் எனவும் அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு வழக்கறிஞர்கள், நேர்மையாக செயல்பட வேண்டும் எனவும் அவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டால் குழப்பங்கள் தான் ஏற்படும் என தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

You may also like...