அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் மேற்படிப்பு மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா

அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா என கண்காணிக்க, மருத்துவ கல்வி இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மேற்படிப்பு மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற நிர்பந்திக்கப்படுவதாக கூறி, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், பணிச்சுமை காரணமாக பயிற்சி மாணவர்கள் த்ற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணி நேர பணியை நிர்ணயித்து 2015ல் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பின் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுவதாக எந்த புகாரும் இல்லை எனவும், கூடுதல் பணி நேரம் ஒதுக்கியது குறித்து புகார் அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் மேற்படிப்பு மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...