அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்படுவதை எதிர்த்தும், நிரந்தர அங்கீகாரம் வழங்க கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் 1994ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நிரந்தர அங்கீகாரம் வழங்க வகை செய்யும் 1994ம் ஆண்டு அரசாணையை திரும்பப் பெற்று, மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், நவம்பர் 12ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப் பிரிவுகளிலும், மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கான விதிகளிலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் என்பது நிரந்தரமானது என்றும், சட்ட விதிகளின் படி அதை திரும்பப் பெற முடியுமே தவிர, காலக்கெடு நிர்ணயித்து கட்டுப்பாடு விதிப்பது சட்டவிரோதமானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சட்டத்தில் சொல்லப்படாத அதிகாரத்தை அதிகாரிகள் செயல்படுத்த முடியாது என்றும், தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நிரந்தரமாக நடத்தப்படும் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்குவது நிர்வாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசாணைக்கு தடைவிதிக்கவேண்டும் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என, தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர், பள்ளிக் கல்வி துறை இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், தொடக்க கல்வி துறை இயக்குனருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

You may also like...