மாநில அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பதவி உயர்வில் இடஒதுக்கீடு கேட்பதற்கு எந்தவொரு தனி நபருக்கும் உள்ளார்ந்த எந்த அடிப்படை உரிமையும் இல்லை” SC order

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5-ந் தேதி, மாநில அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், அரசு காலி பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு உத்தரவை ரத்து செய்தது. குறிப்பிட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உத்தரகாண்ட் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில், “இந்த கோர்ட்டு வகுத்துள்ள சட்டத்தை கருத்தில் கொள்கிறபோது மாநில அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பதவி உயர்வில் இடஒதுக்கீடு கேட்பதற்கு எந்தவொரு தனி நபருக்கும் உள்ளார்ந்த எந்த அடிப்படை உரிமையும் இல்லை” என அதிரடி தீர்ப்பு அளித்தது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்குமாறு மாநில அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட முடியாது என்பது முடிவான சட்டம் ஆகும். இதேபோன்று பதவி உயர்வுகளிலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகள் கட்டுப்படத் தேவை இல்லை.

இருப்பினும், அரசு தனது விருப்புரிமைபடி செயல்பட விரும்பினால், அத்தகைய (இடஒதுக்கீடு) ஏற்பாடுகளை செய்ய விரும்பினால், அரசு பணிகளில் அந்த சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் போதாது என்பதை காட்டுவதற்கான புள்ளிவிவரங்களை சேகரிக்க வேண்டும்.

உத்தரகாண்ட் அரசு 2012-ம் ஆண்டு செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவு செல்லும். மாநில அரசின் உத்தரவு சட்டவிரோதம் என்று ஐகோர்ட்டு கூறி இருக்கக் கூடாது.

பணியிடங்களை நிரப்புவதிலும், பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.

மாநில அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரின் பிரதிநிதித்துவம் போதாது என்று மாநில அரசுகள் கருதி, அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால் அதற்கு அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் பிரிவு 16(4) மற்றும் 16 (4-ஏ) அதிகாரம் வழங்கி உள்ளது.

இந்த சட்டப்பிரிவுகள், பிரதிநிதித்துவத்தின் போதாமை என்பது மாநில அரசின் திருப்திக்கு உட்பட்ட விஷயம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளன. அதே நேரத்தில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால், இடஒதுக்கீட்டில் கருத்து உருவானதின் அடிப்படைக்கு சான்றுகள் (புள்ளிவிவரங்கள்) இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME