புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தராக எஸ்.மோகன் நியமிக்கப்பட்டதை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரிய வழக்கில் பல்கலைகழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தராக எஸ்.மோகன் நியமிக்கப்பட்டதை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரிய வழக்கில் பல்கலைகழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.பழனியப்பா தொடர்ந்துள்ள வழக்கில், துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடல் குழு மற்றும் தேர்வுக் குழு ஆகியவை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாகவும், அவை மூலம் துணைவேந்தராக மோகன் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டது பல்கலைக்கழகத்தின் நலன்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தால் இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டவரை பல்கலைக்கழகத்தின் நிர்வாகி என ஏற்க முடியாது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தேடல் குழுவின் ஒரு உறுப்பினராக உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான செயலாளரை நியமித்திருப்பது விதிமீறல் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல தேடுதல் குழுவில் புதுச்சேரி அரசின் நியமன உறுப்பினராக நியமிக்கபட்ட சென்னை ஐ.ஐ.டி.-யின் மின் பொறியியல் துறை பேராசிரியரான வி.ஜெகதீஷ் குமார் என்பவர், ஏற்கனவே புதுச்சேரி பொறியியல் கல்லூரி மற்றும் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மோகனின் இடைநீக்கம் குறித்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டுமென இடைக்கால கோரிக்கை வைத்துள்ளார். மேலும், துணை வேந்தர் நியமனம் சட்டத்திற்கு புறம்பானது அறிவித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பல்கலைகழக மானியக் குழு விதிகளை பின்பற்றி புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை. வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ரவி ஆஜராகி வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள், வழக்கு குறித்து புதுச்சேரி அரசு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் துணை வேந்தர் மோகன் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Call Now ButtonCALL ME