தலைமை நீதிபதியாக பதவியேற்க காரில் 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த நீதிபதிகள்

தலைமை நீதிபதியாக பதவியேற்க காரில் 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த நீதிபதிகள்

கொல்கத்தா, ஏப்.27-

தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற 2 நீதிபதிகள், பதவி ஏற்பதற்காக, காரிலேயே 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்தனர்.

கொல்கத்தா ஐகோர்ட் மூத்த நீதிபதி திபங்கர் தத்தாவை மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 23-ந் தேதி நியமித்தார்.

அதுபோல் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி விஸ்வநாத் சோமத்தரை மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்தார். நீதி வழங்கும் பணி தாமதமாவதை தவிர்க்க இருவரும் உரிய நேரத்தில் பொறுப்பேற்க முடிவு செய்தனர்.

தற்போது, ஊரடங்கு காரணமாக விமான, ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் காரிலேயே பயணம் செய்ய தீர்மானித்தனர்.

நீதிபதி திபங்கர் தத்தா, நேற்று முன்தினம் காலையில் தன் குடும்பத்தினருடன் காரில் மும்பைக்கு புறப்பட்டார். அவரும், அவருடைய மகனும் மாறி மாறி கார் ஓட்டினர். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் இரவில் வழியில் தங்கி ஓய்வெடுத்தனர்.

2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து இன்று பிற்பகலில் அவர்கள் மும்பையை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓரிரு நாளில், நீதிபதி தத்தா பதவி ஏற்கிறார்.

நீதிபதி விஸ்வநாத் சோமத்தர், இதற்கு முன்பு கொல்கத்தா ஐகோர்ட்டில் பணியாற்றியவர். அவருக்கு அங்கு வீடு உள்ளது. 24-ந் தேதி இரவு, தன் மனைவியுடன் அலகாபாத்தில் இருந்து அரசு காரில் கொல்கத்தாவுக்கு புறப்பட்டார். டிரைவர் கார் ஓட்டினார்.

25-ந் தேதி பிற்பகலில் நீதிபதி சோமத்தர் கொல்கத்தா வந்தடைந்தார். அங்கு சில மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு, அன்று மாலையில், மேகாலயா தலைநகர் ஷில்லாங்குக்கு புறப்பட்டார்.

நேற்று பிற்பகலில் ஷில்லாங் சென்றடைந்தார். நீதிபதி சோமத்தரும் காரிலேயே 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்துள்ளார். அவர் இன்று தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.

இரு நீதிபதிகளும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.👇🏼
. ❈•┈•❀🅜 ❈ɢᴜʟғ ɴᴇᴡs❀•┈•❈

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME