சட்டத்தை மதிக்காத நாட்டில் இருப்பதை விட வெளியேறலாம்! உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை



Advertisement

 தற்போதைய செய்தி
Next
சட்டத்தை மதிக்காத நாட்டில் இருப்பதை விட வெளியேறலாம்! உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை
மாற்றம் செய்த நாள்: பிப் 16,2020 03:31

 35 + 45






புதுடில்லி : தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின், 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவை தொடர்பான வழக்கில், ”இந்நாட்டில் சட்டமே இல்லையா; இங்கிருப்பதை விட, வெளிநாட்டிற்கு போய் விட தோன்றுகிறது,” என, உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா வேதனை தெரிவித்துஉள்ளார்.

மொபைல்போன் சேவை வழங்கும் பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா, டாடா டெலி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், தொலைதொடர்பு துறைக்கு, ‘சரி செய்யப்பட்ட சராசரி வருவாய்’ உட்பட, 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன.




தள்ளுபடி


இது தொடர்பான வழக்கில், ‘நிலுவையை செலுத்த தவறினால் உரிமம் ரத்து செய்யப்படும்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவையும், உச்ச நீதிமன்றம், ஜன., 23ல், தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலுவையை தவணை முறையில் செலுத்த ஒப்புக் கொண்ட நிறுவனங்கள், தவணை காலம் குறித்து வரையறுக்க வேண்டியிருப்பதால், கால அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தன.

இந்த மனு, நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான, மூன்று நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொலைதொடர்பு துறை இயக்குனர் மன்தர் தேஷ்பாண்டே, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலுக்கு எழுதிய கடிதத்தை, அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்தார். அந்தக் கடிதத்தில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ‘சரி செய்யப்பட்ட சராசரி வருவாய்’ நிலுவையை செலுத்த மொபைல்போன் சேவை நிறுவனங்கள் தவறினாலும், மறு உத்தரவு வரும் வரை அந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, உச்ச நீதிமன்ற அமர்வுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அருண் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவு: உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்க வேண்டாம் என, ஒரு சாதாரண அதிகாரி எப்படி கூறலாம்? இதுதான் இந்நாட்டின் சட்டமா? நீதிமன்றங்களை இப்படித் தான் நடத்துவீர்களா? இது, எனக்கு மிகுந்த மனவேதனையை தந்துஉள்ளது. இந்த நீதிமன்றத்திலும், ஏன், இந்த நீதித்துறையிலேயே பணியாற்றக் கூடாது என்ற எண்ணம் எழுந்துள்ளது. நான் இதுவரை இப்படி கோபப்பட்டதில்லை. ஆனால், இந்த நாட்டில், இப்படிப்பட்ட ஒரு நடைமுறையில் எப்படி பணியாற்றுவது என, எனக்கு தெரியவில்லை.


நடவடிக்கை
சொலிசிட்டர் ஜெனரல் என்ற முறையில், கடிதத்தை திரும்பப் பெறுமாறு, அந்த அதிகாரியிடம் கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு கேட்கப்பட்டதா? இதையெல்லாம் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற நடைமுறையில் எங்களால் செயல்பட முடியாது. இந்த அளவிற்கு அந்த அதிகாரிக்கு துணிச்சல் இருந்தால், உச்ச நீதிமன்றம் எதற்கு? அதை மூடிவிடலாம். உச்ச நீதிமன்ற ஆணைக்கு ஒரு அதிகாரி தடை போடுகிறார் என்றால், அவர் என்ன, இந்த உச்ச நீதிமன்றத்தை விட மேலானவரா? இந்த நாட்டில் இருப்பதை விட, வெளியேறுவதே மேல் என்ற எண்ணம் எழுகிறது.

அந்த அதிகாரி மீதும், பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிறுவனங்களின் சீராய்வு மனு தள்ளுபடி ஆன பிறகும், அவை, நிலுவையில் ஒரு பைசா கூட செலுத்தவில்லை. இந்திய நீதித் துறையின் ஆரோக்கியம், அது செயல்படும் விதம் ஆகியவை கவலை அளிக்கக் கூடியவையாக உள்ளன.நிறுவனங்களுக்கு உதவவே அந்த அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். அவராக அதை அனுப்பியிருக்க முடியாது. அவர் கடிதம் எழுதியதன் பின்னணியில் பணம் விளையாடியதா என, தெரியவில்லை. நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான அவர், சிறைக்கு போகவும் கூடும்.


விளக்க வேண்டும்
தொலைதொடர்பு துறை நிர்வாக இயக்குனர்கள், தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் அனைத்து இயக்குனர்கள், மார்ச், 17 நேரில் ஆஜராக வேண்டும். ஏன் நிலுவை தொகையை டிபாசிட் செய்யவில்லை என்பதை, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். எதற்காக, கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் விளக்க வேண்டும். கடிதம் எழுதிய மன்தர் தேஷ்பாண்டே ஆஜராகி, தன் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என, கூற வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் செலுத்த உத்தரவு

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, நேற்று மாலை, தொலை தொடர்பு துறை, அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், நேற்று நள்ளிரவு, 11:59க்குள் நிலுவையை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


உத்தரவு வாபஸ்
உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராக, ‘தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், நிலுவையை செலுத்த தவறினாலும், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என, பிறப்பித்த உத்தரவை, தொலைதொடர்பு துறை, நேற்று திரும்பப் பெற்றது. இந்த உத்தரவு தொடர்பாக, நேற்று உச்ச நீதிமன்றம் இதுவரை இல்லாத வகையில், கடுமையாக சாடியதை அடுத்து, இந்த முடிவை, தொலை தொடர்பு துறை எடுத்துள்ளது.

You may also like...